“பழநி மாநாட்டு தீர்மானங்களை உறுதியுடன் அரசு நிறைவேற்ற வேண்டும்” - வானதி சீனிவாசன்

By இல.ராஜகோபால்

கோவை: “பழநி முத்தமிழ் முருகன் மாநாட்டு தீர்மானங்களை இந்துசமய அறநிலையத் துறை உறுதியுடன் நிறைவேற்ற வேண்டும்,” என பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் சார்பில் பழநியில் ஆகஸ்ட் 24, 25-ம் தேதிகளில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில், 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில், முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும்.

விழாக் காலங்களில் முருகன் திருக்கோயில்களில் மாணவ, மாணவிகளை கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்யப்படும். முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

முருகன் மாநாட்டை நடத்தியதில் திமுக அரசுக்கு பல்வேறு உள்நோக்கங்கள் இருந்தாலும் இந்த தீர்மானங்கள் ஆச்சரியத்தை அளிக்கின்றன. ஆனால், இந்த தீர்மானங்களுக்கு திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்து கோயில்களை மட்டும் அரசு நிர்வகிப்பது தான் மதச்சார்பின்மையா? இந்து கோயில்களை நிர்வகிக்கும் அரசு, இந்து மத நிகழ்ச்சிகளை நடத்திதானே ஆக வேண்டும்.

இந்துக்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றுவது போல நிறைவேற்றி விட்டு, கூட்டணி கட்சிகள் எதிர்ப்பை காரணம் காட்டி அதை செயல்படுத்தாமல் இருக்க திமுக அரசு போடும் நாடகமோ? இது என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. மலேரியா, டெங்கு போல சனாதன தர்மத்தை அதாவது இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என மாநாடு போட்டு பேசியவர்கள், இன்று முத்தமிழ் முருகன் மாநாடு நடத்துகின்றனர். இந்துக்களிடம் ஏற்பட்ட எழுச்சியே இதற்கு காரணம். எனவே, கூட்டணி கட்சிகளின் எதிர்ப்புக்கு அடிபணியாமல் பழநி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இந்து சமய அறநிலையத்துறை உறுதியுடன் நிறைவேற்ற வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE