தவெக மாநாட்டுக்கு விஜய் கட்சியின் மதுரை நிர்வாகிகள் ரெடி - தொண்டர்களுக்காக 200 வாகனங்கள்!

By என்.சன்னாசி

மதுரை: விக்கிரவாண்டியில் நடக்கும் நடிகர் விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டில் பங்கேற்க மதுரையில் இருந்து சுமார் 200 வாகனங்களில் தொண்டர்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். இதைத் தொடர்ந்து கட்சியின் கொடியை கடந்த வாரம் சென்னை பனையூரில் அறிமுகம் செய்தார். அப்போது, “கட்சிக்கான கொள்கை விவரம், கொடியின் விளக்கம் குறித்து விரைவில் நடக்க இருக்கும் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் விரிவாக பேசப்படும்” என விஜய் அறிவித்தார். இதைத் தொடர்ந்து செப்டம்பர் 23-ல் விக்கிரவாண்டியில் மாநாட்டை நடத்த திட்டமிட்டு, அதற்கான பூர்வாங்க பணிகளை த.வெ.க நிர்வாகிகள் தொடங்கியுள்ளனர்.

மாவட்ட வாரியாக த.வெ.க தொண்டர்கள் சுவர் விளம்பரங்கள் வரைதல், வாகனங்கள் ஏற்பாடு செய்தல், மாநாட்டுக்கு கட்சி தொண்டர்களை அழைத்துச் செல்வது தொடர்பான பணிகளை தீவிரமாக தொடங்கியுள்ளனர்.

மதுரையில் வடக்கு மாவட்ட தலைவர் விஜயன்பன் கல்லாணை தலைமையில் பி.பி.குளம் தளபதி உள்ளிட்ட த.வெ.க நிர்வாகிகளும் தொண்டர்களும் மாநாட்டுக்கான பணிகளை தொடங்கியுள்ளனர். அவர்கள் செல்லூர், பி.பி.குளம் பகுதியில் பிரம்மாண்டமாய் சுவர் விளம்பரங்களை எழுதி வைத்துள்ளனர். பிற மாவட்டங்களை மிஞ்சும் விதமாக மதுரை மாவட்டத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டு அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து விஜயன்பன் கல்லாணை உள்ளிட்ட நிர்வாகிகள் கூறுகையில், “விக்கிரவாண்டியில் மாநாடு நடப்பதாக தலைவரும் பொதுச்செயலாளரும் அறிவித்துள்ளனர். இதையடுத்து மாநாட்டுக்காக தொண்டர்களை தயார்படுத்தும் பணி ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கிறது. மதுரையிலும் மாநாடு குறித்த சுவர் விளம்பரங்கள் மற்றும் தொண்டர்களை அழைத்துச் செல்வது குறித்த வேலைகளை தொடங்கி உள்ளோம். மதுரை பகுதியில் இருந்து சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை மாநாட்டில் பங்கேற்க திட்டமிடுகிறோம். இதற்காக 100 பேருந்துகள் உள்ளிட்ட 200 வாகனங்களில் அணிவகுத்துச் செல்ல இருக்கிறோம்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE