சென்னையில் ஃபார்முலா-4 கார் பந்தயம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சென்னையில் ஃபார்முலா - 4 கார் பந்தயம் நடத்த தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு சார்பில் சென்னையில் ஃபார்முலா-4 ஸ்ட்ரீட் கார் பந்தயம் ஆக.31 மற்றும் செப்.1 ஆகிய தேதிகளில் தீவுத்திடலை சுற்றிலும் உள்ள வட்ட வடிவ சாலையில் நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஆயத்த ஏற்பாடுகளும் இரவு, பகலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த கார் பந்தயத்துக்கு தடை கோரி பாஜக செய்தித் தொடர்பாளரான ஏ.என்.எஸ்.பிரசாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவர் தனது மனுவில், ‘பந்தயம் நடைபெறவுள்ள தீவுத்திடல் வழித்தடத்தில் அரசு மருத்துவமனைகள் இருப்பதால் சீறிப்பாயும் வாகனங்களின் சத்தம் காரணமாக நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். பொதுமக்கள் பயன்படுத்தும் பொது சாலையை மறித்து பந்தயம் நடத்துவதால் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படும். வாகனப் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தி மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இந்த சாலையில் கார் பந்தயத்தை நடத்துவது என்பது மோட்டார் வாகன விதிகளுக்கும் எதிரானது. எனவே, இந்த கார் பந்தயத்தை நடத்த தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார். அதற்கு மறுப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, “பந்தயம் நடத்த அரசு செலவிட்ட தொகையை திருப்பி செலுத்த வேண்டுமென உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பந்தயம் நடத்தும் தனியார் அமைப்பு தான் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. அந்த வழக்குக்கும், இந்த வழக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

பொதுமக்கள் பொது சாலையை அணுகும் உரிமையை யாரும் தடுக்க முடியாது. கார் பந்தயம் நடத்துவதற்கான வழித்தடத்தை ஆய்வு செய்து சர்வதேச அமைப்பு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. இந்த பந்தயத்தை இருங்காட்டுக்கோட்டையில் சுற்றுச்சுவருடன் கூடிய சுற்றுப்பாதையில் நடத்த யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை கார் பந்தயத்துக்காக மூட முடியாது. பொதுமக்களுக்கு இடையூறாக நடத்தப்படும் பந்தயத்தை தீவுத்திடலைச் சுற்றியுள்ள சாலைகளில் நடத்த தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார்.

அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “ஏற்கெனவே கார் பந்தயத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பொதுமக்களின் பாதுகாப்பு, மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது, ஒலி கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 7 நிபந்தனைகளை விதித்து உயர் நீதிமன்றம் பந்தயம் நடத்த அனுமதி வழங்கியுள்ளது. இதில் எந்த நிபந்தனைகளையும் மீறவில்லை.

பொதுமக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து இருபுறமும் கம்பி வேலிகள் போடப்பட்டுள்ளது. மருத்துவமனைகளுக்கு செல்வோருக்கும், சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் எந்தவொரு இடையூறும் ஏற்படாது. பந்தயம் இரவு நேரத்தில் மட்டுமே நடத்தப்படுகிறது. அப்போது மட்டும் போக்குவரத்து மாற்று வழித்தடத்தில் மாற்றி விடப்படும்.

இந்தப் பந்தயம் தொடர்பாக ஏற்கெனவே இரு நீதிபதிகள் அமர்வு விரிவாக விசாரித்து உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், மீண்டும் அதே காரணத்துக்காக இந்த வழக்கு அரசியல் ஆதாயத்துக்காக உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளது. பந்தயம் நடக்கும் தினத்தன்று காலையில் தான் எஃப்ஐஏ எனும் சர்வதேச கூட்டமைப்பு ஆய்வு செய்து உரிமம் வழங்கும்” என வாதிட்டார். அதையடுத்து நீதிபதிகள், இந்த கார் பந்தயம் தொடர்பாக ஏற்கெனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தியது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்திருந்தனர்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, “இந்த கார் பந்தயத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது,” எனக் கூறி தமிழக அரசின் அறிக்கையை தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை வியாழக்கிழமை மாலைக்கு தள்ளி வைத்திருந்தனர்.

தடை இல்லை: இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், ‘சென்னையில் ஃபார்முலா-4 கார் பந்தயம் நடத்த அனுமதியளிக்கப்படுகிறது. கார் பந்தயம் நடத்த தடை விதிக்க முடியாது. எஃப்ஐஏ எனும் சர்வதேச கூட்டமைப்பு உரிமத்தைப் பெற்று பந்தயத்தை நடத்த வேண்டும். இந்த பந்தயம் நடத்தப்படுவதால் மருத்துவமனை மற்றும் ரயில் நிலையங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் யாருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் கார் பந்தயத்தை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்’ என்றனர். மேலும், பிரதான வழக்கில் தமிழக அரசு 6 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE