தரையில் நோயாளிகள், ஒரே படுக்கையில் இருவருக்கு சிகிச்சை... - புதுச்சேரி அரசு மருத்துவமனை அவலம்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: ஆளுநர் ஆய்வு செய்து ஓராண்டாகியும் மாற்றமில்லாத சூழலே புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் நிலவுகிறது. படுக்கை வசதி இல்லாததால் தவிக்கும் நோயாளிகளை தரையில் பாயில் படுக்க வைப்பதும், ஒரே படுக்கையில் இருவருக்கு சிகிச்சையளிக்கும் அவலமும் தொடர்கிறது.

புதுச்சேரியில் சட்டப்பேரவை மற்றும் ஆளுநர் மாளிகைக்கு அருகே அரசு பொது மருத்துவமனை உள்ளது. மிக பழமையான இந்த மருத்துவமனையில் நாளுக்கு நாள் குறைபாடுகள் அதிகரித்து வருவதாக நோயாளிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதில் முக்கியமானது நோயாளிகளுக்கான படுக்கை வசதி இல்லாதது. இதுபற்றி புகார் வந்து கடந்த 2022ல் அப்போதைய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மருத்துவமனையை ஆய்வு செய்தார். அதன் பிறகு தொடர்ந்து புகார்கள் வந்ததால் கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலும் மீண்டும் தமிழிசை ஆய்வு செய்தார். அப்படியும் ஓராண்டாகியும் இன்னும் அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

தற்போதும் படுக்கை வசதி இல்லாமல் டிரிப்ஸ் பாட்டிலுடன் தரையில் படுத்து நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். சில படுக்கைகளில் ஒரே சமயத்தில் இரண்டு நோயாளிகளை படுக்க வைத்து சிகிச்சையளித்து வருகிறார்கள். இதுபற்றி நோயாளிகள் கூறுகையில், "போதிய படுக்கை வசதி இல்லாததால் நடைப்பாதையிலும், தரையிலும் பாய் விரித்து படுக்கவைத்துத் தான் சிகிச்சையளிக்கிறார்கள். எம்ஆர்ஐ ஸ்கேன் இல்லை. டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையும் உள்ளதாக தெரிவிக்கின்றனர். அரசு மருத்துவமனையின் செயல்பாடு ஆரம்ப சுகாதார நிலையத்தைவிட மோசமாக உள்ளது.

கடந்த முறை ஆளுநர் ஆய்வு செய்தபோது புதிய அறுவை சிகிச்சை கூடம், கூடுதல் படுக்கைகள், மருத்துவ சாதனங்கள் பற்றாக்குறை உள்ளிட்டவை சரி செய்யப்படும் என கூறிவிட்டுச் சென்றார். ஆனால், எதுவுமே நடக்கவில்லை. அரசு பொது மருத்துவமனையை விட கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அதிக முக்கியத்துவம் தருவதால் இதைக் கண்டுகொள்வதில்லை என்ற பேச்சு உண்மையாகி வருகிறது. மருத்துவமனையும் சுகாதாரமும் சரியாக இல்லை. அருகிலுள்ள சட்டப்பேரவைக்கு வரும் முதல்வரும், ஆளுநர் மாளிகையிலுள்ள தற்போதைய ஆளுநரும் ஒருமுறை அரசு மருத்துவமனைக்கு வந்து பார்த்தாலே இங்கு வரும் நோயாளிகள் படும் கஷ்டம் என்னவென்று புரியும்" என்று நோயாளிகள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE