சென்னை: தமிழகத்துக்கு உரிய சமக்ரா சிக்ஷா திட்ட நிதியை அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கல்வியின் தரத்தை மேம்படுத்துவதையும், சமமான மற்றும் தரமான கல்வியை அளிப்பதையும், வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, மத்திய அரசின் உதவியோடு செயல்படுத்தப்படுகின்ற திட்டமாக சமக்ரா சிக்ஷா திட்டம் விளங்குகிறது.
இந்தத் திட்டத்தின்கீழ், 3,586 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும், இதில் 60 விழுக்காடு பங்கான 2,152 கோடி ரூபாயினை மத்திய அரசு அளிக்க வேண்டுமென்றும், இதற்கான கருத்துரு ஏப்ரல் 2024 ஆம் ஆண்டிலேயே மத்திய அரசுக்கு அனுப்பியும், முதல் தவணையான 573 கோடி ரூபாய் இன்னும் மத்திய அரசால் விடுவிக்கப்படவில்லை என்றும், இது தவிர முந்தைய ஆண்டில் விடுவிக்கப்பட வேண்டிய 249 கோடி ரூபாயும் இதுவரை விடுவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தத் திட்டத்தின்கீழ் நிதி விடுவிக்கப்படாததற்கு காரணம், தேசியக் கல்விக் கொள்கையின்கீழ் வரும் பி.எம். ஸ்ரீ பள்ளிகளை திறக்காதது என்று கூறப்படுகிறது. அதாவது, நடைமுறையில் உள்ள சமக்ரா சிக்ஷா திட்டத்தின் நிதியைப் பெற வேண்டுமானால் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை தற்போது மத்திய அரசால் விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டத்திற்கு புதிய நிபந்தனையை விதிப்பது என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் கல்வி பயின்று கொண்டிருக்கும் மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இது குறித்து, முதலமைச்சர், பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தாலும், இது ஒரு காலந்தாழ்ந்த நடவடிக்கைதான்.
மக்களவைத் தேர்தல் முடிந்த உடனேயே மத்திய கல்வித் துறை அமைச்சர் மற்றும் பிரதமர் ஆகியோரை நேரில் சந்தித்து இதில் உள்ள நிலையை விளக்கியும், தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மூலம் இது குறித்த உண்மை நிலையை மத்திய அரசு உயர் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தும், இந்தத் திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை பெற்றிருக்க வேண்டும். ஆனால், இதனைச் செய்ய திமுக அரசு தவறிவிட்டது. பல்வேறு அரசு விழாக்களை நடத்துவதில் செலுத்திய அக்கறையை, சமக்ரா சிக்ஷா திட்ட நிதியை பெறுவதிலும் முதலமைச்சர் செலுத்தியிருந்தால், இந்நேரத்தில் அதற்கான நிதியை பெற்றிருக்கலாம்.
தமிழக மாணவ, மாணவியரின் கல்வி மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளை கருத்தில் கொண்டு, சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் வழங்க வேண்டிய நிதியை உடனடியாக அளிக்க மத்திய அரசு முன் வரவேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
நியாய விலைக் கடைகளில் அனைத்துப் பொருட்களும் ஒரே நேரத்தில் கிடைக்க நடவடிக்கை: ஓபிஎஸ் மற்றொரு அறிக்கையில், “தமிழகத்தில் யாரும் பட்டினியின்றி இருப்பதை உறுதி செய்யும் வகையில் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நியாயவிலைக் கடைகள் மூலம் மாதந்தோறும் இலவச அரிசியை பெறுவதோடு மட்டுமல்லாமல், சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு போன்றவற்றையும் குறைந்த விலையில் பொதுமக்கள் பெற்று வருகின்றனர். ஆனால், இவற்றை சரியான அளவில் ஒரே நேரத்தில் பெற முடியாத அவல நிலை தற்போது நிலவி வருகிறது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நியாய விலைக் கடைகளில், அனைத்துப் பொருட்களும் அனைத்து நேரங்களிலும் இருப்பில் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. சில நேர்வுகளில், முந்தைய மாதத்திற்குரிய பொருட்கள் அதற்கு அடுத்த மாதம் வழங்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, பொதுமக்கள் ஒரு மாதத்தில் பலமுறை நியாய விலைக் கடைகளுக்கு செல்லக்கூடிய அவல நிலை நிலவுகிறது. பெரும்பாலான இடங்களில் நியாய விலைக் கடைகள் சற்று தள்ளியிருப்பதால், நீண்ட நேரம் நடைபயணம் மேற்கொண்டோ அல்லது பேருந்தில் பயணம் செய்தோ செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதன் விளைவாக பொதுமக்களுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களாக, நியாய விலைக் கடைகளுக்கு மக்கள் அலைக்கழிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இவற்றை எல்லாம் ஊர்ஜிதம் செய்யும் விதமாக, மாதத்தின் கடைசி நாளில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதில்லை என்றும், இந்த மாதம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி அனைத்து அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் என்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் கூறியிருப்பதாக செய்தி வந்துள்ளது. அந்தந்த மாதத்துக்குரிய பொருட்களை அந்த
மாதத்தில் எந்தத் தேதியிலும் பெற்றுக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதேபோன்று, நியாய விலைக் கடைகளுக்கு வரும் பொருட்கள் அனைத்தும் எடை குறைவாக வழங்கப்படுவதால், வருகின்ற பொருட்களை பிரித்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய சூழ்நிலை நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நியாய விலைக் கடைகளுக்கு வழங்க வேண்டிய பொருட்கள் தரமானதாகவும், எடை சரியானதாகவும் இருக்க வேண்டுமென்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அந்தந்த மாதத்துக்குரிய பொருட்கள் அந்தந்த மாதத்தில் ஒரே நேரத்தில் கிடைக்கவும், தரமான மற்றும் சரியான எடை கொண்ட பொருட்களை வழங்கவும் திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago