வாடிக்கையாளர் திருப்திக்கு முன்னுரிமை தர வேண்டும்: தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் துறை தலைவர் மரியம்மா தாமஸ் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: வாடிக்கையாளர்களின் திருப்திக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சேவை ஆற்ற வேண்டும் என தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல்துறை தலைவர் மரியம்மா தாமஸ் வலியுறுத்தினார்.

அஞ்சல்துறையின் சென்னை நகர மண்டலம் சார்பில், ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ‘மண்டல மேன்மை விருது’ வழங்கி கவுரவித்து வருகிறது.

அதன்படி, 2023-24-ம் ஆண்டுக்கான மண்டல மேன்மை விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில், சென்னை நகர மண்டலஅஞ்சல்துறை தலைவர்ஜி.நடராஜன் தலைமை உரையாற்றுகையில், ‘‘2023-24-ம் ஆண்டில் சென்னை நகர மண்டலம் ரூ.366.72 கோடி மொத்த வருவாய் ஈட்டியுள்ளது. இதில், ரூ.266 கோடி விரைவு அஞ்சல் மற்றும் பார்சல் சேவை மூலமாகவும், எஞ்சிய தொகை அஞ்சலக சேமிப்பு கணக்குகள் மூலம் கிடைத்துள்ளது. பெண்களுக்கான சிறப்பு சேமிப்பு திட்டமான ‘மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்கள்’ திட்டத்தின் கீழ், 74 ஆயிரம் பெண்கள் பயன் அடைந்துள்ளனர். மேலும், ஒரு லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் முதலிடம்: பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று ஆதார் புதுப்பித்தலின் கீழ், 2023-24-ம் ஆண்டில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பரிவர்த் தனைகள் செய்யப்பட்டன. சென்னை நகர அஞ்சல் மண்டலம் மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் பரிவர்த்தனையில் இந்திய அளவில் முதல் இடத்தையும், ஆதார்அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட கட்டண முறை பரிவர்த்தனைகளில் 2-வது இடத்தையும் பெற்றுள்ளது. இதேபோல், அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சென்னை நகர மண்டலம் முந்தைய ஆண்டைவிட 20 சதவீதமும், கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டின் கீழ் 18 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது’ என்றார்.

விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல்துறை தலைவர் மரியம்மா தாமஸ் பங்கேற்று சிறப்பாக பணிபுரிந்த 150 பேருக்கு விருதுகளை வழங்கினார்.

பின்னர், அவர் பேசுகையில், ‘‘தமிழ்நாடு அஞ்சல் வட்டத்துக்கு, சென்னை நகர மண்டலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகஉள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.366 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இங்கு சிறப்பாக பணியாற்றி விருது பெற்றவர்களுக்கு நான் விடுக்கும் செய்தி என்னவென்றால், வாடிக்கையாளர்களின் திருப்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதுதான்.

நமது அலுவலகத்தில் பதவிவரிசை கிடையாது. அனைவரும் முக்கியமானவர்கள். நாம் அனைவரும் ஒரே குறிக்கோளுக்காக உழைக்கிறோம். அது வாடிக்கையாளர் திருப்தி. எனவே, அவர்களுக்கு சிறப்பான சேவை வழங்க வேண்டும்’ என்றார்.

அஞ்சல்துறை தலைவர் (அஞ்சல் மற்றும் வணிக மேம்பாடு) பி.பி.தேவி, தமிழ்நாடு வட்ட இயக்குநர் (தலைமையிடம்) கே.ஏ.தேவராஜ், அஞ்சல்துறை இயக்குநர் மேஜர் மனோஜ், உதவி இயக்குநர் (வணிக மேம்பாடு) ஜி.பாபு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE