சென்னை விமான நிலையத்துக்கு 11-வது முறை வெடிகுண்டு மிரட்டல்: முதல்வர் ஸ்டாலின் சென்ற விமானத்தில் சோதனை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு 11-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், முதல்வர் ஸ்டாலின் பயணித்த விமானம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வந்த இ-மெயிலில், சென்னையில் இருந்து சான்பிரான்சிஸ்கோ செல்லும் விமானம் மற்றும் சர்வதேச விமான நிலையம் புறப்பாடு பகுதி கழிப்பறையில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னையில் இருந்து சான்பிரான்சிஸ்கோ நகருக்கு நேரடி விமான சேவை இல்லை. ஆனால்,இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், முதல்வர் ஸ்டாலின், துபாய் வழியாக சான்பிரான்சிஸ்கோ செல்ல இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, விமான நிலையபோலீஸாரும், பாதுகாப்பு படையினரும், வெடிகுண்டு நிபுணர்களுடன் விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக சோதனை நடத்தினார். குறிப்பாக, முதல்வர் பயணிக்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் இ-மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்த கழிப்பறையிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், வெடிகுண்டு எதுவும் இல்லை. இந்த மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

இந்த சோதனையால், முதல்வர் செல்ல இருந்த விமானம் 16 நிமிடங்கள் தாமதமாக இரவு 10.16 மணிக்குதுபாய் புறப்பட்டது. சென்னை விமான நிலையத்துக்கு ஏற்கெனவே இதேபோல 10 முறை குண்டு மிரட்டல் வந்த நிலையில், தற்போது 11-வது முறையாக, அதுவும் முதல்வர் பயணம் செய்யும் விமானத்தை குறிப்பிட்டு மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்துவிமான நிலைய போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE