ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் சர்வதேச அரசியல் கல்வி பயில லண்டன் புறப்பட்டு சென்றார் அண்ணாமலை

By செய்திப்பிரிவு

சென்னை: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் கல்வி பயில்வதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, விமானம்மூலம் லண்டன் புறப்பட்டுச் சென்றார். அவரை கட்சியினர் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

நாடு முழுவதும் பாஜகவில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கைபணி வரும் 1-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கிடையே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற கட்சி சார்ந்த நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று வந்தார்.

சென்னையில் கடந்த 25-ம்தேதி நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக, திமுகவை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குறித்து அண்ணாமலை பேசியது, அக்கட்சியினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், லண்டன் சென்றுசர்வதேச அரசியல் கல்வி பயில்வதற்கான பணிகளை அண்ணாமலை கடந்த சில மாதங்களாகவே மேற்கொண்டு வந்தார். பாஜக தலைமையிடம் இதற்கு அனுமதியும் பெற்றிருந்தார். இந்நிலையில், சென்னையில் இருந்து விமானம் மூலம் அண்ணாமலை நேற்று காலை லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார்.

சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன், மீனவர் பிரிவு தலைவர் முனுசாமி, விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜன், அமைப்புசாரா பிரிவு தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் சாய் சத்யன், காளிதாஸ் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பூங்கொத்து வழங்கி, அவரை வழியனுப்பி வைத்தனர்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 4 மாதங்கள் தங்கியிருந்து படிப்பை மேற்கொள்ளும் அண்ணாமலை, அங்கிருந்தபடியே கட்சிநிகழ்வுகளை கவனித்துக் கொள்வார். படிப்பை முடித்துவிட்டு டிசம்பர் இறுதிக்குள் சென்னை திரும்ப உள்ளார். இந்த 4 மாதங்களும் கட்சியை தேசிய பொறுப்பாளர்கள் வழிநடத்துவார்கள். இதுகுறித்து கட்சி நிர்வாகிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE