விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் குறித்து இந்து அமைப்பினருடன் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை

By செய்திப்பிரிவு

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் குறித்து இந்து அமைப்பினருடன் சென்னை போலீஸ் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 7-ம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபாடு செய்வார்கள். பின்னர், தினமும் பூஜைகள் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

இதனிடையே, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் தொடர்பாக இந்து அமைப்பினருடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் காவல் ஆணையர்கள் கண்ணன் (தெற்கு), ஆர்.சுதாகர் (போக்குவரத்து), நரேந்திரன் நாயர் (வடக்கு) ஆகியோர் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்கள்.

இதில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, இந்து அனுமன் சேனா, பாரதிய ஜனதா கட்சி,பாரத் இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட பல அமைப்புகளை சேர்ந்த சுமார் 200 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக்கலந்தாய்வில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபாடு செய்வதற்கு போலீஸார் வழங்கிய அறிவுரைகள்: விநாயகர் சிலைகள் நிறுவுமிடத்தின் நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத் துறை அல்லது அரசுத் துறையிடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

தீயணைப்புத் துறை, மின்வாரியம், ஆகியவற்றிடமிருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும்.சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியிடம் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கான படிவங்களை பூர்த்தி செய்து, அதில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை கடைபிடிக்க உறுதியளித்து, அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

நிறுவப்படும் சிலையின் உயரமானது அடித்தளத்திலிருந்து மேடை வரை 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது. பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும். மதவாத வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலோ, பிற மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ முழக்கமிடுவதற்கும், கோஷமிடுவதற்கும் எவ்விதத்திலும் இடம் தரக்கூடாது.

விநாயகர் சிலைகளை கரைக்க காவல் துறை அனுமதிக்கப்பட்ட நாட்களில், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட 4 சக்கர வாகனங்களில் எடுத்துச் சென்று அமைதியான முறையில் கரைக்க வேண்டும். விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள் மற்றும் கரைப்பிடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை போலீஸார் வழங்கினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE