‘15,000 ஆசிரியர்கள் ஊதியத்தை நிறுத்தும் நிலை...’ - மத்திய அரசு மீது அமைச்சர் அன்பில் மகேஸ் சாடல்

By தீ.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால்தான் தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்குவோம் என மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். மேலும், ‘மத்திய அரசின் நிதி ஒதுக்கப்படாததால் 15,000 ஆசிரியர்களின் ஊதியம் கூட நிறுத்தப்படக் கூடிய நிலை ஏற்படும்’ என்றார். அதேவேளையில், “தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் சம்பளம் உள்ளிட்ட செலவினங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் தொடர்ந்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.

திருச்சி திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் தந்தை அன்பில் பொய்யாமொழியின் 25-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. திருச்சி திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அன்பில் பொய்யாமொழியின் உருவப்படத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் மதிமுக முதன்மைச் செயலாளர் திருச்சி எம்.பி துரை வைகோ மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியது: “அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்எஸ்ஏ) மத்திய அரசு தமிழகத்துக்கு கடந்த ஜூன் மாதம் வழங்க வேண்டிய பங்கீடு தொகை ரூ.573 கோடி நிதியை வழங்கவில்லை. அதுமட்டுமல்ல, கடந்த ஆண்டு தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு வரவேண்டிய கடைசி தவணையான ரூ.249 கோடியையும் வழங்கவில்லை.

தமிழக முதல்வரும் அமெரிக்கா செல்வதற்கு முன்பு இது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்தி விட்டு சென்றார். நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி தலைமையில், தமிழக எம்பிகள் அனைவரும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்து, மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு இதில் அரசியல் செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தினோம்.

ஆனால், அவர்கள் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தில் இணைந்தால் மட்டுமே இந்த நிதியை வழங்க முடியும் என்று கூறுகிறார்கள். புதிய கல்விக் கொள்கையில் தமிழகம் இணைந்தே ஆக வேண்டும் என்கிற அழுத்தத்தை மத்திய அரசு தருகிறது. தேசிய கல்விக் கொள்கை 2020-ம் ஆண்டுதான் அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே அனைவருக்கும் கல்வி திட்டம், 2018-ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டு விட்டது. எனவே, இந்த விஷயத்தில் அரசியல் செய்யாமல் உடனடியாக பணத்தை மத்திய அரசு விடுவிக்க வேண்டும். நிதியை விடுவிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மத்திய அரசு நிதி வழங்காததால் ஏற்பட்டுள்ள நிதிச் சுமையை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் சம்பளம் உள்ளிட்ட செலவினங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் தொடர்ந்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது. அதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டது. அப்படி என்றால் அவர்கள் நம்மை ஊக்குவிக்கத்தான் வேண்டும். கூடுதலாக பணம் ஒதுக்கி தமிழகத்தின் மாதிரியை மற்ற மாநிலங்களில் செயல்படுத்துவோம் என கூறுவதுதான் ஆரோக்கியமாக இருக்கும். கல்வி என்பது ஒத்திசைவு பட்டியலில் இருக்கிறது என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அழுத்தத்தை ஏன் தருகிறார்கள் என தான் கேட்கத் தோன்றுகிறது.

புதிய கல்விக் கொள்கை தொடர்பான விவாதத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஆனால், மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் நிதியை நிறுத்துவது சரியல்ல. அந்த நிதி ஒதுக்கப்படாததால் 15,000 ஆசிரியர்களின் ஊதியம் கூட நிறுத்தப்படக் கூடிய நிலை ஏற்படும்” என்றார் அமைச்சர் அன்பில் மகேஸ்.

பின்னணி என்ன? - தமிழக பள்ளிக் கல்வித் துறையில் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்குகிறது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் (சமக்ரா சிக்‌ஷா) இந்த நிதியை பெற மத்திய அரசின் விதிமுறைகளை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும்.

இதற்கிடையே மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் பிஎம் ஸ்ரீ பள்ளி எனும் திட்டம் உள்ளது. இத்திட்டத்தில் டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கம், தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்கள் இதுவரை இணையவில்லை. அதேநேரம், பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேர மும்மொழி கொள்கையில் இருந்து விலக்கு உட்பட சில கோரிக்கைகளை தமிழகம் முன்வைத்தது. ஆனால், அதை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டதால் இந்த திட்டத்தில் தமிழகம் சேரவில்லை. இதனால் கடந்த கல்வியாண்டில் (2023-24) 4-வது தவணை நிதியுதவியும் நடப்பு கல்வியாண்டில் (2024-25) முதல் தவணை நிதியையும் மத்திய அரசு நிறுத்தியுள்ளது.

இதனால் மாநில அரசின் பங்களிப்பை கொண்டு தற்போது திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், நீண்ட காலத்துக்கு இதை கொண்டு சமாளிக்க முடியாது. எனவே பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் பாதிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். மானியத்தை விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதவிர பாமக, காங்கிரஸ்மற்றும் கல்வியாளர்கள், ஆசிரியர்சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பிலும் நிதியை விடுவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE