குமரி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் வரத்து குறைவுக்கான காரணம் என்ன? - மாவட்ட ஆட்சியர் ஆய்வு

By எல்.மோகன்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து நெல் குறைவான அளவில் கொள்முதல் செய்யப்படுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மைத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் புத்தளம், பறக்கை, தேரூர் ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கன்னிப்பூ நெல் அறுவடை பணி துவங்கியுள்ளது. விவசாயிகள் விளைவித்த நெல் நேரடியாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நெல் கொள்முதல் நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது.

பொதுவாக அறுவடை செய்யப்பட்ட உடன் நெல்லின் ஈரப்பதம் 20% வெயில் காலங்களிலும், 22% மழைக்காலங்களிலும் காணப்படும். விவசாயிகள் நெல் ஈரப்பதம் 17% குறையும் வரை காயவைத்தோ அல்லது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உலர்களங்களில் காயவைத்தோ காய்ந்த நெல்லை (17%) நெல் கொள்முதல் நிலையத்தில் அளிக்க வேண்டும்.

ஈரப்பதமானி மூலம் ஈரப்பதம் சோதனை செய்யப்பட்டு நெல்லின் புறத்தூய்மையும் சோதனை செய்யப்பட்டு தரமான நெல் தானியம் கொள்முதல் செய்யப்படும். சுத்திகரிப்பு இயந்திரங்களால் வைக்கோல் மற்றும் பதர்கள் அகற்றப்பட்டு தூய்மையான நெல் தானியங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்குரிய குறைந்தபட்ச ஆதாரவிலை சாமானிய ரகங்கள் மற்றும் கிரேடு ஏ ரகங்களுக்கு விவசாயிகளின் வங்கி வணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படுகிறது.

இவ்விதம் கொள்முதல் செய்யப்படும் நெல் தானியம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அரிசி ஆக்கப்பட்டு பின்னர் நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கிகளில் சேமிக்கப்பட்டு நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேரூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், திங்கள்நகர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், கடுக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகம், தாழக்குடி சமுதாய நலக்கூடம், திட்டுவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகம், செண்பகராமன்புதூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கொள்முதல் நிலையம், வடசேரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், சிறமடம் அரசு தொடக்கப்பள்ளி, பறக்கை கால்நடை மருத்துவமனை வளாகம், புத்தளம் அரியபெருமாள்விளை ஆகிய பத்து இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் அரியபெருமாள்விளையில் உப்பளம் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் புத்தளம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் விவசாயிகளிடம் நெல்வரத்து குறைவிற்கான காரணங்களை கேட்டறிந்தார். அப்போது, செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய கொள்முதல் விலை சாதாரண ரகங்களுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.24.05, கிரேடு ஏ ரகங்களுக்கு கிலோவுக்கு ரூ.24.50 என்ற அளவில் கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படுவதால் நெல்வரத்து அதிகரிக்கும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், கொள்முதல் நிலையத்திலுள்ள அனைத்து உபகரணங்களும் சரியான முறையில் செயல்படுகிறதா எனவும் ஆட்சியரால் ஆய்வு செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பறக்கை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகள் அதிக அளவில் நெல் கொள்முதல் செய்வதற்காக அனுப்புவதை உறுதி செய்திட வேளாண்மைத்துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். விவசாயிகள் நெல் வழங்குவதில் உள்ள இடர்பாடுகள் களையப்பட வேண்டும் என்றும், குத்தகைதாரர்களுக்கு உரிய சான்றுகள் வழங்கி நெல் கொள்முதல் செய்வதை வருவாய் துறையினர் மூலம் உறுதி செய்ய வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் வருகின்ற 1-ம் தேதி முதல் திறக்கப்பட இருக்கும் தேரூர் நேரடி நெல் கொள்முதல் நிலையமும் ஆட்சியரால் ஆய்வு செய்யபட்டது. கொள்முதல் நிலையத்தை சுற்றிலும் சுகாதார நிலை பேணப்பட வேண்டும் என்றும் அருகிலுள்ள வீடுகளுக்கு கொள்முதல் நிலையத்திலுள்ள தூசி துரும்புகள் செல்லாதவாறு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளுக்கு ஆட்சியர் அழகுமீனா அறிவுறுத்தினார்.

ஆட்சியரின் இந்த ஆய்வில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஆல்பர்ட் ராபின்சன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜென்கின் பிராபாகர், வேளாண்மை உதவி இயக்குநர் பொன்ராணி, மற்றும் வேளாண்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE