எச்ஐவி குறித்து நடமாடும் வாகனங்களின் மூலம் நீலகிரியில் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம்

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பொதுமக்களுக்கு எச்ஐவி எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று குறித்து நடமாடும் வாகனங்களின் மூலம் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தை நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா இன்று தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்ட நிர்வாகம் மாவட்ட நிர்வாகம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் சார்பில் பொதுமக்களுக்கு எச்ஐவி பால்வினை நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று உதகை மலை ரயில் நிலையத்தில் இதற்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது நாட்டுப்புறக் கலைஞர்கள் கலை நிகழ்ச்சியோடு எய்ட்ஸ், பால்வினை நோய்கள் பற்றி கருத்துமிக்க நிகழ்ச்சிகளை நடத்தினர்.

எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றிய ஒட்டு வில்லைகளை மாவட்ட ஆட்சியர் ஆட்டோக்களில் ஒட்டினார். பின்பு மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வுக்காக செல்லும் பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியையும் தொடங்கி வைத்தார். இதில் செவிலியர்கள், பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இன்று முதல் செப்டம்பர் 28-ம் தேதி வரை ஒரு மாதத்துக்கு இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் குக்கிராமங்கள் வரை விழிப்புணர்வு வாகனம் சென்று கலை நிகழ்ச்சிகள் மூலம் எச்ஐவி பால்வினை நோய் தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும். இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர், மருத்துவர்கள், சுகாதார துறை இணை இயக்குநர் பாலுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE