தமிழகத்தில் தகுதியான குடும்பங்களுக்கு விரைவாக ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்க அமைச்சர் அறிவுறுத்தல்

By கி.கணேஷ்

சென்னை: புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்துள்ள தகுதியான குடும்பங்களுக்கு விரைவாக ஸ்மார்ட் அட்டை வழங்க வேண்டும் என்றும், நெல் கொள்முதலுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அர.சக்கரபாணி அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில், அமைச்சர் சக்கரபாணி தலைமையில், ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், சட்டப்பேரவை அறிவிப்புகள் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், காலிப் பணியிடங்களை நிரப்புதல், நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடித்தல், சிறப்பு பொது விநியோகத் திட்டப் பொருட்களான துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றின் ஆகஸ்டு, செப்டம்பர் மாதத்துக்கான இருப்பு, நியாய விலைக்கடைகளுக்கான நகர்வு, எதிர்வரும் காரீஃப் 2024-25 -ம் ஆண்டு பருவத்தின் நெல் கொள்முதலுக்கான முன்னேற்பாடுகள், குடும்ப அட்டைதாரர்களுக்கான பொருள்களின் விநியோகம், புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குதல் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

அப்போது அமைச்சர் பேசியதாவது: “குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகளில் அனைத்துப் பொருட்களும் தரமானதாகவும், உரிய நேரத்தில் கிடைக்கவும் நடவடிக்கை எடுத்து, நியாய விலைக் கடைகளுக்கு வருகை தரும் குடும்ப அட்டைதாரர்களிடம் இன்முகத்துடன் நடந்து கொள்ள வேண்டும். முன்மாதிரி அங்காடிகளாக நியாய விலைக் கடைகளை மாற்றுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தினை ஆய்வு செய்து, தேவைப்படும் இடங்களில் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதியதாக பகுதி மற்றும் முழு நேர நியாய விலை கடைகளை திறக்க வேண்டும். புதிய குடும்ப அட்டைகள் வேண்டி பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை விரைந்து அச்சிட்டு வழங்க வேண்டும்.

மீதமுள்ள விண்ணப்பங்களில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு புதிய குடும்ப அட்டைகளை விரைவாக வழங்க வேண்டும். எதிர்வரும் கரீப் 2024-25 ம் பருவத்தில் செப்.1 முதலே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்க வேண்டும். நெல்லினைப் பாதுகாப்புடன் சேமித்து வைக்க ஏதுவாக தேவையான அளவு பாலித்தீன் தார்ப்பாய்கள் மற்றும் வெட்டுக் கற்கள் இருப்பு வைக்க வேண்டும்.

அமுதம் அங்காடிகளை மாவட்டம் தோறும் திறந்து, மக்களுக்கு தரமான, வெளிச்சந்தையை விட குறைவான விலையில் பொருட்களை வழங்க வேண்டும். உணவுத் துறை அலுவலர்கள் கூட்டுறவுத் துறையின் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி பொது விநியோகத் திட்டத்த்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்” என்றார். கூட்டத்தில், துறையின் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சு.பழனிசாமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குனர், ஆ.அண்ணாதுரை, உணவுப் பொருள் வழங்கல் இயக்குனர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE