“ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் விரைவில்...” - அமெரிக்கா புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: “தமிழகத்தை 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றக்கூடிய நம்முடைய இலக்கை விரைவாக அடைவோம். இதற்காக உலகின் கவனத்தை தமிழகத்தை நோக்கி ஈர்க்க அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ மாநகரங்களுக்கு நான் செல்கிறேன்” என்று அமெரிக்காவுக்குப் புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

அமெரிக்காவுக்குப் புறப்பட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை இரவு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “அரசு பயணமாக நான் அமெரிக்கா செல்கிறேன். தமிழகத்துக்கான தொழில் முதலீடுகளை, ஈர்த்துவிட்டு வருகிற செப்.14-ம் தேதியன்று திரும்புவது போல என்னுடைய பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. முதலீடுகளை ஈர்க்க இதுபோன்ற பயணங்களை நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன்.

ஏற்கெனவே ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஸ்பெயின், ஜப்பான், ஆகிய நாடுகளுக்கு நான் பயணங்களை மேற்கொண்டதன் மூலமாக, தமிழகத்துக்கு பல்வேறு முதலீடுகள் வந்திருக்கிறது. இந்த பயணங்கள் மூலமாக, 18 ஆயிரத்து 521 நபர்களுக்கு வேலைவாயப்பு அளிக்கக்கூடிய வகையில், 10 ஆயிரத்து 882 கோடி ரூபாய் மதிப்பிலான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அதில், 990 கோடி ரூபாய் முதலீட்டுக்கான 5 திட்டங்கள் தற்போது உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது.

கடந்த ஆக.21-ம் தேதியன்று நடந்த தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில், இந்த 5 திட்டங்களில் சிங்கப்பூரைச் சார்ந்த ஹைபி நிறுவனத்தின் திட்டத்தையும், ஜப்பானின் ஓமுரான் நிறுவனத்தின் திட்டத்தையும் நான் தொடங்கி வைத்தேன். இந்த இரு நிறுவனங்களின் திட்டத்தில் மட்டும் 1,538 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. 3,796 கோடி மதிப்பிலான 3 திட்டங்களின் கட்டுமானப் பணிகள் பல்வேறு முன்னேற்ற நிலைகளில் இருக்கிறது.

கடந்த ஆக.21-ம் தேதியன்று நடந்த தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஜப்பானின் மிட்சுபா மற்றும் சட்ராக் நிறுவனங்களின் திட்டங்களை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டியிருக்கிறேன். ரூ.3,540 கோடி மதிப்பிலான 3 திட்டங்கள் பல்வேறு முன்னேற்ற நிலைகளில் இருந்து வருகிறது. 438 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு விரிவாக்கத் திட்டங்கள் விரைவில் செயல்படுத்தக் கூடிய நிலையை அடைந்திருக்கிறது. 2,100 கோடி ரூபாய் மதிப்பிலான 4 திட்டங்கள் அந்தந்த நிறுவனங்களுடைய தொழில் முதலீட்டு சூழ்நிலை காரணமாக சிறிய தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

நாங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும், துரிதமான நிலையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை ஆதாரப்பூர்வமாக சுட்டிக்காட்டத்தான், இங்கு விரிவாக இதையெல்லாம் நான் குறிப்பிட்டேன். அதனால்தான் இதுபோன்ற பயணங்கள் மிகமிக முக்கியமானவை. திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இந்த மூன்றாண்டு காலத்தில், இதுவரை 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது. இதன் மொத்த மதிப்பு 9 லட்சத்து 99 ஆயிரத்து 93 கோடி ரூபாய். இதன்மூலம் 18 லட்சத்து 89 ஆயிரத்து 234 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதில் 234 திட்டங்கள் உற்பத்தியைத் தொடங்கி விட்டனர். 4 லட்சத்து 14 ஆயிரத்து 717 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துவிட்டது.

மற்ற ஒப்பந்தங்களும் படிப்படியாக அடுத்து செயல்பாட்டுக்கு வரும். முதலீடுகளை ஈர்ப்பதற்கான என்னுடைய கடந்த வெளிநாட்டு பயணங்கள் மூலம் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களால், பல நிறுவனங்கள் தொடங்கப்பட்டும், செயல்பாட்டிலும் இருக்கிறது. அதேபோல், தற்போதைய பயணம் மூலம், மேற்கொள்ளும் ஒப்பந்தங்களைத் தொடர்ந்து கண்காணித்து அதையெல்லாம் செயல்பாட்டுக்கு கொண்டு வருவேன்.

இந்த முதலீடுகள் எல்லாம் தமிழகத்தை 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றக்கூடிய நம்முடைய இலக்கை விரைவாக அடைவோம். இதற்காக உலகின் கவனத்தை தமிழகத்தை நோக்கி ஈர்க்க அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ மாநகரங்களுக்கு நான் செல்கிறேன். ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி திரும்பி வரும்போது அது குறித்து நிச்சயம் நான் தெரிவிப்பேன். அமெரிக்க வாழ் தமிழர்களை சந்திக்க இருக்கிறேன். உங்கள் அனைவரது வாழ்த்துகளுடன் இந்த பயணம் வெற்றிகரமானதாக அமையும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

அமைச்சரவை மாற்றம்? - பின்னர், ‘சமக்ரா சிக்‌ஷா’ திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதி ஒதுக்காதது குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின்,“தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், தமிழகத்துக்கு வரவேண்டிய கிட்டத்தட்ட ரூ.573 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் தமிழகத்துக்கான நிதியை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும். இது குறித்து திமுக எம்பிக்கள் அனைவரும் நாடாளுமன்றத்திலும் பேசியுள்ளனர். சம்பந்தப்பட்ட அமைச்சரை சந்தித்து நேரடியாகவும் கூறியுள்ளனர். நானும் இன்று கடிதம் எழுதியுள்ளேன். தொடர்ந்து வலியுறுத்துவோம்,” என்றார். அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு, “மாறுதல் ஒன்றே மாறாதது. வெயிட் அண்ட் ஸீ” என்றார்.

ரஜினி - துரைமுருகன் குறித்த கேள்விக்கு, “அவர்கள் இருவரும் நீண்ட கால நண்பர்கள். இருவரும் பதில் அளித்துவிட்டனர். அமைச்சர் துரைமுருகன் கூறியது போல நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, பகைச்சுவையாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அதேதான் நான் திரும்பவும் கூறுகிறேன்” என்றார்.

அமெரிக்க முதலீட்டு பயணம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “செல்லும் காரியம் நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. முதலீட்டாளர்களைப் பொறுத்தவரையில், போட்டிப் போட்டிக்கொண்டு என்னை சந்திக்கவும், தமிழகத்துக்கு நிறைய செய்வதற்காக என்னிடம் நேரம் கேட்டுள்ளனர். இப்போது நான் மேற்கொள்ளும் பயண நாட்களே போதாது என்று நான் கருதுகிறேன். இந்தியாவிலேயே தமிழகம் தான் இன்று தொழில் முதலீட்டில் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனரோ இல்லையோ, வெளிநாட்டில் உள்ளவர்கள் கூறுகின்றனர். நிச்சயமாக நீங்கள் நினைப்பது நடக்கும்,” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

நாணயம் வெளியீட்டுக்குப் பின் மத்திய அரசுடன் இணக்கமான நிலை உள்ளதா என்ற கேள்விக்கு “இணக்கமான நிலை என்பது உங்கள் எண்ணம். மத்திய அரசின் அனுமதியுடன் வெளியிடப்பட்டது. அந்த மரியாதை அடிப்படையில் அழைத்தோம் வந்தார்கள். வெளியிட்டு சென்றார்கள்,” என்றார்.

ஒட்டுமொத்த தொழில் முதலீடு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா என்ற கேள்விக்கு, “வெள்ளை அறிக்கை வெளியிடுவது மரபு இல்லை. பல மாநிலங்களில் இருந்து முதலீடுகளுக்கு போட்டி இருப்பதால், அதை விரும்ப மாட்டார்கள். முதலீடுகள் முழுமையாக வந்ததும் வெளியிடுவோம்,” என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.

இரவு 10 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் முதல்வர் ஸ்டாலினை வழியனுப்ப விமான நிலையத்தில் அமைச்சர்கள், திமுக முக்கிய நிர்வாகிகள் முதல்வரை வந்திருந்தனர். உயர்தர வேலைவாய்ப்பு, உயர்தர முதலீடு ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்த பயணத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. நாளை சான்பிரான்சிஸ்கோ செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில், தொழில் தொடங்க தமிழகம் வருமாறு முதலீட்டாளர்களுக்கு அவர் அழைப்பு விடுப்பதுடன், முக்கிய முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது. 31-ம் தேதி, புலம்பெயர்ந்த தமிழர்களுடன் கலந்துரையாடுகிறார்.

செப்.2-ல் சிகாகோ செல்கிறார். அங்கு 12-ம் தேதி வரை தங்கி யிருக்கும் முதல்வர் ஸ்டாலின், ‘ஃபார்ச்சூன் 500’ பட்டியலில் உள்ள சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுடன் பேசுகிறார். கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் நிர்வாகிகளையும் சந்திக்க உள்ளார். செப்.7-ம் தேதி அயலக தமிழர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்