சம்பள நிலுவைக்கு எதிராக மேல்முறையீடு செய்த தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம்: ஐகோர்ட் உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை: உதவிப் பேராசிரியர்கள் 10 பேருக்கு சம்பள நிலுவை வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு மனு தாக்கல் செய்த தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை சாரா டக்கர் கல்லுாரியில் புஷ்பலதா கிரேஸ்லின் உட்பட 10 பேர் உதவி பேராசிரியர்களாக 2009-ல் நியமிக்கப்பட்டனர். இவர்களின் நியமனத்துக்கு நெல்லை மண்டல கல்லூரி கல்வி இயக்குநர் 2020-ல் ஒப்புதல் அளித்தார். இந்த ஒப்புதல் மறுநாள் திரும்பப் பெறப்பட்டது. இதை எதிர்த்து உதவி பேராசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்த போது ஒப்புதலை திரும்பப் பெற்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இதை பதிவு செய்து கொண்டு மனுதாரர்களுக்கு ஊதியம் வழங்க 2021-ல் தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், மனுதாரர்களுக்கு 2022 ஜூலை முதல் தான் சம்பளம் வழங்கப்பட்டது. இதனால் 2009 ஜூன் 17 முதல் 2022 ஜூன் வரை சம்பளம் மற்றும் சலுகைகள் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பேராசிரியர்கள் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, ''மனுதாரரர்கள் அங்கீகரிக்கப்பட்ட உதவி பேராசிரியர்கள். அவர்களுக்கு பணிபுரிந்த காலத்திற்குரிய சம்பளத்தை வழங்க வேண்டும்'' என உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்கல்வித்துறை செயலாளர், கல்லூரி கல்வி இயக்குநர், நெல்லை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் ஆகியோர் 10 மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இன்று இந்த மனுக்களை விசாரித்து நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு, ''இந்த 10 மேல்முறையீடுகளும், தமிழக அரசு தனது குடிமக்கள் மீது தொடுத்துள்ள படுமோசமான விளையாட்டின் விளைவாக எழுந்துள்ள அற்பமான முறையீடுகளாகும். இது போன்ற ஒரு முடிவு அரசால் எடுக்கப்படுவது ஆச்சரியமாக உள்ளது. எதிர்மனுதாரர்கள் 2009-ல் உதவி பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நியமனம் 2020-ல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் எதிர்மனுதாரர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. இதனால் தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை. இதனால் மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

மேலும், ஒவ்வொரு மேல்முறையீட்டு மனுவுக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தத்தொகையில் ரூ.25 ஆயிரத்தை சம்பந்தப்பட்ட உதவி போராசியருக்கும், ரூ.25 ஆயிரத்தை சென்னை அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் அரசு வழங்க வேண்டும். இந்த அபராதத் தொகையை மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்த அதிகாரிகளிடம் இருந்து அரசு வசூலிக்கலாம். எதிர்காலத்தில் இதுபோன்ற மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்வதை அரசு தவிர்க்கும் என நீதிமன்றம் நம்புகிறது'' என உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE