பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தில் சேராததால் மத்திய அரசின் நிதி நிறுத்தம் - ‘தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு பாதிப்பு’

By சி.பிரதாப்

சென்னை: பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணையாததால் பள்ளி வளர்ச்சிப் பணிகளுக்கான நிதியுதவியை மத்திய அரசு மீண்டும் நிறுத்திவிட்டது. இந்நிலையில், தமிழகத்துக்கு ‘சமக்ரா சிக் ஷா’ திட்டத்தின்கீழ் மத்திய அரசு தரவேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் நிதியுதவி வழங்கி வருகிறது. மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவி தமிழக அரசுக்கு அளிக்கப்படுகிறது. இந்த நிதியை பெற மத்திய அரசின் விரிவான கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும்.

இதற்கிடையே, மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் பிஎம் ஸ்ரீ பள்ளி எனும் திட்டம் உள்ளது. இதன்மூலம் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இத்திட்டத்தில் டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கம், தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் இதுவரை இணையவில்லை. மேலும், தமிழகம் மட்டும் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேர மும்மொழி கொள்கையில் விலக்கு உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்தது.

ஆனால், அதை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டதால் திட்டத்தில் தமிழகமும் சேராமல் உள்ளது. மறுபுறம் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணையாத மாநிலங்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் நிதியை மத்திய அரசு நிறுத்திவிட்டது. அதன்படி, கடந்த கல்வியாண்டில் (2023-24) 3, 4-வது தவணை நிதியுதவி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து நடப்பு கல்வியாண்டிலும் (2024-25) ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, “நடப்பாண்டில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட நிதியாக தமிழகத்துக்கு ரூ.3,586 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ.1,434 கோடியாகும். மீதமுள்ள ரூ.2,152 கோடி நிதி மத்திய அரசால் வழங்கப்படும். இந்த தொகை 4 தவணைகளாக வழங்கப்படும். அதன்படி நடப்பாண்டு, முதல் தவணையாக ரூ.573 கோடி கடந்த ஜூன் மாதமே வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை நிதியைத் தராமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு பல்வேறு முறை வலியுறுத்தியும், மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தும் பலனில்லை.

பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தில் இணைந்தால் மட்டுமே நிதியை விடுவிக்க முடியும் என்பதில் மத்திய அரசு திட்டவட்டமாக இருக்கிறது. அந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழி கொள்கை உள்ளிட்ட சில வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டிய நிலை ஏற்படும். இதனால் அதை ஏற்பதற்கு தமிழக அரசு மறுத்துவருகிறது. மத்திய நிதி கிடைக்காததால் மாநில அரசின் பங்களிப்பு நிதியை கொண்டு தற்போது திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால், நீண்ட காலத்துக்கு இதை கொண்டு சமாளிக்க முடியாது. வரும் மாதங்களில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற்றவர்களுக்கான கல்விக் கட்டணம், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், மாணவர்களுக்கான கற்றல் திட்டங்கள் உள்ளிட்ட கல்வி சார்ந்த செயல்பாடுகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது,” என்றனர்.

பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்: இந்தப் பின்னணியில், மானியத்தை விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்துக்கு ‘சமக்ரா சிக் ஷா’ திட்டத்தின்கீழ் மத்திய அரசு தரவேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகம் உட்பட சில மாநிலங்களில் ‘சமக்ரா சிக்‌ஷா’ திட்டத்தின்கீழ் வழங்கப்பட வேண்டிய முதல் தவணை நிதி விடுவிக்கப்படவில்லை. இது பள்ளிக் கல்வித் துறையில் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் முதன்மையான திட்டமாகும். இந்த திட்டத்தின்கீழ் உரிய நேரத்தில் நிதியை விடுவிப்பது மிகவும் அவசியமாகும்.

ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர்களுக்கான ஊதியம் மற்றும் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சிகள் ஆகியவற்றுக்கு திட்ட ஒப்புதல் வாரியத்தின் (Project Approval Board) அனுமதிக்கு உட்பட்டு நிதி விடுவிக்கப்படுகிறது. அதன்படி, 2024-25-ம் கல்வியாண்டில் தமிழகத்துக்கு ரூ.3,586 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.2,152 கோடியாகும்(60சதவீதம்). மத்திய அரசின் அந்த பங்களிப்பை பெற கு ஏதுவாக முன்மொழிவுகள் ஏப்ரல் மாதமே சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், முதல் தவணையான ரூ.573 கோடியை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதுதவிர முந்தைய ஆண்டுக்கான ரூ.249 கோடியையும் மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. தமிழகத்தின் எம்பி.க்கள் குழு, மத்திய கல்வி அமைச்சரைச் சந்தித்து, உரிய நேரத்தில் மானியங்களை விடுவிக்க ஜூலை மாதம் கோரிக்கை வைத்தனர். ஆனாலும், இதுவரை ‘சமக்ரா சிக்‌ஷா’ திட்டத்தின் கீழ் மாநில அரசுக்கு மானியம் விடுவிக்கப்படவில்லை. பிஎம்ஸ்ரீ பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கையை (NEP) முழுமையாக அமல்படுத்துவதை, தற்போதைய சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின்கீழ் நிதியை அனுமதிப்பதற்கான முன்நிபந்தனையாக இணைக்க மத்திய அரசு முயற்சிப்பது தெரிய வந்துள்ளது.

இதற்கானபுரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட மாநிலங்களுக்கு நிதி தரப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் உள்ள குறிப்பிட்ட சில விதிகள் ஏற்புடையதாக இல்லை. பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் சேர புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறைந்தபட்ச மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. பிராந்திய அடிப்படையில் சமூக - பொருளாதார நிலைமைகள், உட்கட்டமைப்பு வசதிகள், நிதி ஆதாரங்கள் ஆகியவற்றில் வேறுபாடுகள் இருக்கின்ற. எனவே, பொதுப்பட்டியலில் உள்ள கல்வி தொடர்பான விஷயங்களில் மாணவர்களை பாதிக்கும் கொள்கைகளை அமல்படுத்தும் போது, அதில் ஒவ்வொரு மாநிலத்தின் நியாயமான கருத்தும் உள்ளடங்கி இருக்க வேண்டும்.

சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நிதியை நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் தற்போதைய நடவடிக்கை, பின்தங்கிய நிலையில் வாழும் லட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வி மற்றும் ஆசிரியர்களை நேரடியாக பாதிக்கும். இத்தகைய நடவடிக்கை சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின் பிரதான நோக்கமான எந்தவொரு குழந்தைக்கும் கல்வி வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது என்பதற்கு எதிரானது. எனவே, சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க பிரதமர் நரேந்திர மோடி இதில் நேரடியாக தலையிட வேண்டும். விவாதங்கள் தேவைப்படும் ஒரு கொள்கையை கல்விக்கான நிதி வழங்கிடும் விஷயத்துடன் பொருத்திடக் கூடாது’ என்று அதில் அதில் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர பாமக, காங்கிரஸ் உட்பட அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பிலும் நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE