வருவாய் நிர்வாக ஆணையராக அமுதாவுக்கு கூடுதல் பொறுப்பு; மணிவாசனுக்கு விஜிலென்ஸ் ஆணையர் பணி

By கி.கணேஷ்

சென்னை: டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.கே.பிரபாகர் கவனித்து வந்த வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை, விஜிலென்ஸ் ஆணையர் ஆகிய பொறுப்புகள் பி.அமுதா, க.மணிவாசன் ஆகியோரிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையராக இருந்தவர் எஸ்.கே.பிரபாகர், கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் உள்ள இவர் சமீபத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) தலைவராக நியமிக்கப்பட்டார். அண்மையில், இவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து, வருவாய் நிர்வாக ஆணையர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில், எஸ்.கே.பிரபாகர் கவனித்து வந்த துறைகள் வேறு இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து, தலைமைச் செயலர் நா.முருகானந்தம் இன்று (ஆக.27) வெளியிட்ட உத்தரவில், ‘எஸ்.கே.பிரபாகர் கவனித்துவந்த கண்காணிப்பு ஆணையர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையர் பொறுப்பை, நீர்வளத் துறை செயலர் க.மணிவாசன் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார். அதேபோல், எஸ்.கே.பிரபாகர் வகித்த வருவாய் நிர்வாக ஆணையர் பொறுப்பை, வருவாய்த் துறை செயலர் பி.அமுதா கவனிப்பார்’ எனக் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE