“70 வயது இபிஎஸ் பேசியது சரியா?” - அதிமுகவினருக்கு ‘டை’யை குறிப்பிட்டு அண்ணாமலை பதிலடி

By செய்திப்பிரிவு

சென்னை: “70 வயதுக்கு மேல் உள்ள தலைவர்கள் தலைக்கு ‘டை’ அடித்துவிட்டால், தங்களை இளைஞர் என்று நினைத்துக் கொள்கின்றனர். இன்றைக்கு இருக்கக் கூடிய முன்னாள் அமைச்சர்களும் தலைக்கு ‘டை’ அடித்துவிட்டால் தங்களை இளைஞராக நினைத்துக் கொள்கின்றனர். இளைஞர் என்பது ‘டை’ அடிப்பதில் இல்லை, பேச்சு, செயல், ஆற்றலில் இருக்க வேண்டும். அதனால்தான் திரும்பவும் சொல்கிறேன், என்னைப் பற்றி பேசினால், நானும் திரும்பப் பேசுவேன்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமி குறித்த அவரது பேச்சுக்கு அதிமுகவினர் ஆற்றிவரும் எதிர்வினை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எடப்பாடி பழனிசாமி மீது நான் வைத்த விமர்சனம், நூறு சதவீதம் என்னைப் பொறுத்தவரை சரி. அதிலிருந்து நான் ஒரு புள்ளி அளவுகூட பின்வாங்க மாட்டேன். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவரும், தினந்தோறும் என்னை திட்டலாம். என்னை தற்குறி என்று கூறலாம். படிப்பு குறித்து பேசி கொச்சைப்படுத்தலாம். நான் செய்யக் கூடிய வேலையை கொச்சைப்படுத்தலாம். ஆட்டை வெட்டலாம். இதெல்லாம் அவர்கள் செய்யலாம்.

நான் அப்படியே கையைக் கட்டிக்கொண்டு, என்னை மன்னித்து விடுங்கள் அண்ணா, உங்களுக்கு 40 வருட அனுபவம் இருக்கிறது. எனக்கு 3 வருட அனுபவம்தான் இருக்கிறது, என்று சொல்வதற்காக நான் வரவில்லை. கை, காலைப் பிடித்து, வேலை செய்யாமல் உழைக்காமல் நான் வந்ததாக கூறுகின்றனர். விடிய விடிய படித்தது எனக்கு தெரியும். விடிய விடிய பால் கறந்தது எனக்கு தெரியும். விடிய விடிய எங்க அப்பாவுடன் மண்வெட்டி பிடித்த கை. இருபது வருடங்கள் ஆனாலும், இன்னும் காப்புக் காய்ச்சிருக்கிறது பாருங்கள். இதெல்லாம் எனக்குத் தெரியும்.

ஜெயக்குமார் அரசியல் அனுபவம் தங்களுக்கு இருப்பதாக கூறுகிறாரா? 39 வயது அண்ணாமலையை விடுங்கள். 70 வயதுடைய எடப்பாடி பழனிசாமி பேசியது சரியா என்று ஜெயக்குமார் விளக்கம் கொடுக்கட்டும். கையை, காலைப் பிடித்து இந்தப் பதவிக்கு வந்ததாக கூறுகின்றனர். ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவராக எப்படி நடந்து கொண்டிருக்கிறேன்.

கர்நாடகாவில் பாஜக அரசாக இருந்தாலும் உண்ணாவிரம் நடக்கிறது. மத்தியப் பிரதேச அரசின் முதல்வர் பாஜகவைச் சேர்ந்தவராக இருந்தாலும், வரவேற்க நான் செல்வது இல்லை. ஒரு தேசியக் கட்சியைச் சேர்ந்தவனாக இருந்தாலும், தமிழகத்தை முதன்படுத்தி அரசியல் செய்து கொண்டிருக்கிறேன். எதற்காக? தமிழக மக்கள் அந்த அரசியலை விரும்புகின்றனர், எதிர்பார்க்கின்றனர். காங்கிரஸ் போன்று பாஜக இருக்கக் கூடாது என்று நினைக்கின்றனர். எனவே, அதிமுகவினர் குய்யோ, முய்யோ என்று கத்துவதை விட்டுவிட வேண்டும்.

70 வயதுக்கு மேல் உள்ள தலைவர்கள் தலைக்கு ‘டை’ அடித்துவிட்டால், இளைஞர் என்று நினைத்துக் கொள்கின்றனர். இன்றைக்கு இருக்கக் கூடிய முன்னாள் அமைச்சர்களும் தலைக்கு ‘டை’ அடித்துவிட்டால் தங்களை இளைஞராக நினைத்துக் கொள்கின்றனர். இளைஞர் என்பது ‘டை’ அடிப்பதில் இல்லை, பேச்சு, செயல், ஆற்றலில் இருக்க வேண்டும். அதனால்தான் திரும்பவும் சொல்கிறேன், என்னைப் பற்றி பேசினால், நானும் திரும்பவும் பேசுவேன்.

53 வயது ராகுல் காந்தி இளைஞர் என்று சொல்லும் அளவுக்கு மோசமாக போய்விட்டது. முதல்வர் ஸ்டாலின் இளைஞரணி தலைவராக எத்தனை ஆண்டு காலம் இருந்தார்? உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி தலைவர் அவருக்கு வயது 50. எங்களுடைய கட்சியில் 35 வயதுக்கு மேல் ஒருநாள் இருந்தாலும் இளைஞரணி தலைவராக இருக்க விடமாட்டேன். அதை மூன்று வருடமாக கடைபிடிக்கின்றோம். தரம் தாழ்ந்து யாரையும் விமர்சிக்கவில்லை.

நான் கையை, காலைப் பிடித்து வந்ததாக அதிமுகவினர் கூறினர். அதற்கு பதிலளிக்க வேண்டியது என் கடமை, உரிமை. என்னுடைய நாற்காலிக்கு அந்த மரியாதை இருக்கிறது. பாஜகவின் மாநிலத் தலைவர் பதவிக்கான இருக்கைக்கு நான் மரியாதை கொடுக்க வேண்டும். அதற்காக நான் பதில் சொல்லியிருக்கிறேன்,” என்று அண்ணாமலை கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்