“சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்துக்கான நிதியை தமிழகத்துக்கு ஒதுக்காதது அரசமைப்புக்கு விரோதமானது” - செல்வப்பெருந்தகை

By செய்திப்பிரிவு

சென்னை: “சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்கு நாடாளுமன்ற பட்ஜெட் மூலம் ஒதுக்கப்பட்ட தொகையை மாநில அரசுக்கு ஒதுக்காமல் இருப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும். புதிய கல்விக் கொள்கை திணிப்பினால் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்க மறுக்கிற ஒன்றிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசை கண்டித்து தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய பாஜக அரசு 2020 இல் அறிவித்த புதிய கல்விக் கொள்கையை 2021-ல் ஆட்சியமைந்து முதல் பட்ஜெட் தாக்கல் செய்த போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரையில் தமிழ்நாடு அதை ஏற்றுக் கொள்ளாது, புதிய கல்விக் கொள்கையை ஆராய நீதியரசர் முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

அக்குழு 2022 இல் அமைக்கப்பட்டு ஜூலை 1, 2024 இல் 600 பக்கங்கள் கொண்ட வரைவு அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது. இதில் 1968 முதல் ஏற்றுக் கொண்ட இருமொழி கொள்கையையும், புதிய கல்விக் கொள்கை புகுத்திய மூன்றாவது, ஐந்தாவது மற்றும் எட்டாவது வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை ரத்து செய்து குழு பரிந்துரை செய்திருக்கிறது. இந்நிலையில் ஒன்றிய அரசு மாநிலங்களிடையே திணித்த புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத மாநிலங்களுக்கு நிதி வழங்க மறுத்து வருகிறது.

2024-25 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கென நிதி ஒதுக்கீட்டின்படி சமக்ரா சிக்ஷயா அபியான் திட்டத்திற்கு ரூபாய் 3586 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதில் 60 சதவிகித தொகையான ரூபாய் 2152 கோடி ஒன்றிய அரசின் பங்காகவும், 40 சதவிகித தொகையான ரூபாய் 1434 கோடி மாநில அரசின் பங்காகவும் நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இதை நான்கு தவணைகளில் ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும்.

நடப்பாண்டிற்கான முதல் தவணை ஜூன் மாதத்தில் விடுவித்திருக்க வேண்டும். அப்படி விடுவிக்காத நிலையில் ஒன்றிய அரசுக்கு உடனடியாக நிதியை விடுவிக்குமாறு பலமுறை கடிதங்கள் மாநில அரசால் எழுதப்பட்டது. இதனால் 8 லட்சம் மாணவர்கள் படிக்கிற மாநில கல்வித்துறை கடும் பொருளாதார மற்றும் நிர்வாக நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. ஏறத்தாழ 15,000 ஆசிரியர்களுக்கு வருகிற மாதத்திற்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

அதேபோல, கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவிகித ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேருகிற ஏழை,எளிய மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத நிலையும் ஏற்பட்டிருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கை தயாரிப்பதற்கு முன்பாக மாநில அரசுகளை கலந்தாலோசிக்கவில்லை. அரசமைப்புச் சட்டத்தில் கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால் மாநில அரசுகளை கலந்து தான் ஒன்றிய அரசு முடிவெடுக்க வேண்டும். ஆனால், புதிய கல்விக் கொள்கை மாநில உரிமைகளை, பன்முகத்தன்மையை உதாசீனப்படுத்துகிற வகையில் அமைந்துள்ளது. அரசு பள்ளிகளை பலகீனப்படுத்தி, கல்வியை தனியார் மயமாக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்திய கருத்தியலான வேற்றுமையில் ஒற்றுமை கண்டு பல்வேறு கலாச்சார பண்பாடுகளை ஏற்க மறுக்கிற வகையில் ஆர்.எஸ்.எஸ். பங்கேற்போடு தயாரிக்கபபட்ட புதிய கல்விக் கொள்கை இருப்பதால் தமிழ்நாடு அதனை கடுமையாக எதிர்க்கிறது. தமிழர்களின் பண்பாட்டிற்கு எதிராக சமஸ்கிருத மயமாக்கப்பட்ட காவிமயமாக்கும் கல்வி முறையை புகுத்தி ஒரே நாடு, ஒற்றை கலாச்சாரத்தை பாஜக திணிக்க முயற்சிக்கிறது.

அயல்நாட்டு பல்கலைக் கழகங்களான ஆகஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் கல்வி நிறுவனங்களுக்கு இணையான தரமுள்ள பல்கலைக் கழகங்களை இந்தியாவில் உருவாக்குவதற்கு பதிலாக அதனுடைய கிளைகளை இங்கே திறப்பது நமது கல்விமுறையை வணிகமயமாக்கும் முயற்சியாகும். எந்த கல்விமுறை அனைவருக்கும் சமஉரிமையும், சமமான கற்றல் வாய்ப்பையும் வழங்குகிறதோ அதைத் தான் தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளும். அதற்கு மாறாக, அரசு பள்ளிகளை அழித்து இடஒதுக்கீட்டை ஒழிக்கிற முயற்சிகளை ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழகத்தில் உள்ள கல்விமுறை 10 + 2 என்ற நடைமுறை உள்ளது. புதிய கல்விக் கொள்கையின்படி 5+3+3+4 என்ற முறை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முதல் வகுப்புக்கு குறைந்தபட்ச வயது 5 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக தான் தமிழ்நாடு அரசு மாநில புதிய கல்விக் கொள்கையை அறிவிக்க உள்ளது.

இந்நிலையில் ஒன்றிய அரசு 10 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான கல்விமுறையை ஒருங்கிணைக்க சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய கல்விக் கொள்கையின்படி பி.எம். ஸ்ரீ திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிற முயற்சி நடைபெறுகிறது. இவற்றில் மும்மொழி திட்டம் நடைமுறையில் உள்ளது.

ஆனால், 1968 முதற்கொண்டு இருமொழி கொள்கையை தமிழ்நாடு அரசு பின்பற்றி வருகிறது. இதன்மூலம் இந்தி மொழியை திணிக்கிற முயற்சியை ஒன்றிய அரசு புகுத்துகிறது. இதனை தமிழ்நாடு அரசு எதிர்ப்பதோடு, புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாது என்று அறிவித்திருக்கிறது. இதே எதிர்ப்பை கர்நாடகா, கேரளா, டெல்லி, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றன.

எனவே, இந்தியாவிலேயே கல்வித்துறையில் முன்னோடி மாநிலமாக இருக்கிற தமிழ்நாட்டின் கல்வி முறையை சீரழிக்கிற வகையில் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்கு நாடாளுமன்ற பட்ஜெட் மூலம் ஒதுக்கப்பட்ட தொகையை மாநில அரசுக்கு ஒதுக்காமல் இருப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும். நாடாளுமன்றத்தை அவமதிக்கிற, கூட்டாட்சி தத்துவத்தை புறக்கணிக்கிற செயலாகும்.

ஏற்கனவே, நீட் திணிப்பால் தமிழக மாணவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். இதையொட்டி புதிய கல்விக் கொள்கை திணிப்பினால் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்க மறுக்கிற ஒன்றிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசை கண்டித்து தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பாக உடனடியாக நிதியை விடுவிக்குமாறு கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்