தொற்றா நோய்களில் இருந்து இளைய தலைமுறையினரை பாதுகாக்க ‘விறுவிறு நடையால் ஏற்படும் 20 நன்மைகள்’ செயல்திட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: இளைய தலைமுறையினரிடம் நடக்கும் பழக்கம் குறைந்து வருவதால், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘விறு விறு நடையால் ஏற்படும் 20 நன்மைகள்’ குறித்தசெயல் திட்டத்தை தமிழக பொது சுகாதாரத்துறை தொடங்கியுள்ளது.

உலகளவில் இதய பாதிப்பு, பக்கவாதம், புற்றுநோய், நாள்பட்ட சுவாச பிரச்னை உள்ளிட்ட தொற்றா நோய்களால் ஆண்டுக்கு 4.1 கோடி பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவதாகவும், அதில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2030-ம் ஆண்டுக்குள் தொற்றா நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் இளம் தலைமுறையினரிடம் தொற்றா நோய்களை கட்டுப்படுத்தும் விதமாக, ‘விறு விறு நடையால் ஏற்படும்20 நன்மைகள்’ குறித்த விழிப்புணர்வு செயல் திட்டத்தை பொதுசுகாதாரத்துறை செயல்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறுகையில், “இன்றைய இளம் தலைமுறையினரிடையே, நடத்தல் என்பது குறைந்துள்ளது. வீட்டு அருகில் இருக்கும் கடைகளுக்கு கூட பைக்கில் தான் செல்கின்றனர். வளர் பருவத்திலேயே நடக்காவிட்டால், 30 வயதுக்கு மேல், நீரிழிவு, இதய பாதிப்பு உள்ளிட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட அதிகம் வாய்ப்புள்ளது. அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இதற்கான விழிப்புணர்வு கையேடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி, கல்லுாரிகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்” என்றார்.

என்ன நன்மைகள்? - இதய நோயின் அபாயத்தை குறைப்பது, உடல் எடையை பராமரிப்பது, மன அழுத்தத்தை குறைப்பது, உடல் ஆற்றலை அதிகரிப்பது, மனநிலையை மகிழ்ச்சியாகமாற்றுவது, ரத்த ஓட்டத்தைசீராக்குவது, உடல் பருமனைகுறைப்பது, மனக் கவலையைகுறைப்பது, நுரையீரலின் செயல்பாட்டை அதிகரிப்பது உட்பட விறுவிறு நடையால் 20 நன்மைகள் கிடைக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE