புதுப்பிக்கப்பட்ட 1,064 பழைய பேருந்துகள்; தமிழகத்தில் 1,796 புதிய பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 1,064 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் 1,796 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் போக்குவரத்துத் துறை விளக்கமளித்துள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 2022-23-ம் நிதியாண்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் 833 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் மீதமுள்ள 167 பேருந்துகள் வரும் நவம்பர் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். அதேபோல 1,000 பழைய பேருந்துகளை புதுப்பிக்க ரூ.154 கோடி ஒதுக்கப்பட்டு, 910 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

தொடர்ந்து 2023-24-ம் நிதியாண்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.446.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 888 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மீதமுள்ள 112 பேருந்துகள் நவம்பர் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும். அதேபோல 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்க ரூ.76.34 கோடி ஒதுக்கப்பட்டு 154 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதையடுத்து 2024-25-ம் நிதியாண்டில் 3,000 பேருந்துகளை கொள்முதல் செய்ய ரூ.1,535.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 503 பேருந்துகளுக்கு டெண்டர் கோரி ஆணை வழங்கப்பட்டு, வரும் நவம்பர் மாதத்துக்குள் பணி நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரவுள்ளன.

500 மின்சார பேருந்துகள்: மேலும் 2,544 பேருந்துகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதுதவிர ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் 2,166 பிஎஸ்-6வகை டீசல் பேருந்துகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் 552 தாழ்தளப் பேருந்துகளுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டு, 59 தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மீதமுள்ள 493 பேருந்துகள் வரும் நவம்பர் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். மேலும் 1,614 புதியடீசல் பேருந்துகள், புதிய 500மின்சார பேருந்துகள் ஆகியவற்றை கொள்முதல் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 16 பேருந்துகளும் பயன்பாட்டில் உள்ளன.

அந்தவகையில் கடந்த ஆக.23-ம் தேதி வரை தமிழக அரசின் சார்பில் மொத்தமாக 3,071 புதிய பேருந்துகளுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டு, இதுவரை 1,796 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அதேபோல 1,500 பேருந்துகளில் 1,064 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE