தமிழகம் பயணித்த விவசாய சங்கத் தலைவர்கள் டெல்லியில் தடுத்து நிறுத்தம்: பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

By எஸ்.கல்யாணசுந்தரம்

திருச்சி: திருச்சிக்கு வரவிருந்த விவசாய சங்கத் தலைவர்களை டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய மத்திய அரசைக் கண்டிக்கிறோம் என ஐக்கிய விவசாய சங்கத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் கூறியுள்ளார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் தமிழ்நாடு தழுவிய கருத்தரங்கம் திருச்சியில் நாளை (ஆக.27) நடைபெறவுள்ளது. மத்திய அரசு விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்கவும், எம்.எஸ்.சுவாமிநாதன் அளித்த பரிந்துரைகளை அமல்படுத்தவும் மத்திய அரசு மறுக்கிறது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் அடிப்படை நோக்கம் கொண்ட மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்தி விவசாயிகளை மத்திய அரசு ஒடுக்க நினைக்கிறது.

விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோருக்கு விரோதமான மூன்று குற்றவியல் சட்டங்களைக் கொண்டு வந்து ஒட்டுமொத்த இந்திய மக்களை அடிமைப்படுத்த முயற்சிக்கிறது. இதற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஐக்கிய விவசாயிகளை சங்கத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள விவசாயிகளை ஒருங்கிணைக்கும் பணியின் ஒரு பகுதியாக திருச்சியில் நாளை (ஆக.27) கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜகஜித்சிங் டல்லேவால், பல்தேர்சிங் சர்சா ஆகியோர் திங்கள்கிழமை டெல்லியிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தர இருந்தனர்.

இந்த நிலையில், இதற்கென டெல்லி விமான நிலையத்துக்கு வந்த இருவரையும், திருச்சிக்கு செல்ல விடாமல் தடுத்து, போலீஸார் திருப்பி அனுப்பியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளையும், தமிழக விவசாயிகளையும் அவமதிக்கும் நடவடிக்கையாகும். மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்த்து போராட்டங்களை திட்டமிடுவோம்,” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE