தனி நன்கொடை வசூலால் மதுரை பாஜகவில் மோதல்: விளக்கம் கேட்டு நோட்டீஸ்

By கி.மகாராஜன் 


மதுரை: மதுரையில் அண்ணாமலை பொதுக் கூட்டத்துக்கு மாவட்ட அளவில் ரசீது புத்தகம் அச்சடிக்கப்பட்டு பணம் வசூலிக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்டு மாநில பொருளாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தமிழக பாஜகவில் நன்கொடை வசூலிக்க மாநிலக்குழு ரசீது அச்சடித்து மாவட்டங்களுக்கு வழங்கப்படும். மாவட்ட அளவில் ரசீது அச்சடித்து நன்கொடை வசூலிக்கக் கூடாது என்பது கட்சி விதியாகும். இந்த விதிமுறையை மீறி நன்கொடை வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை முனிச்சாலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்ற பொதுக்கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட அளவில் ரசீது புத்தகம் அச்சடிக்கப்பட்டு லட்சக்கணக்கில் நன்கொடை வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

மதுரை மாநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களுக்கும் ரசீது புத்தகம் கொடுக்கப்பட்டு நன்கொடை வசூலிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில தலைமையிடம் நிர்வாகிகள் பலர் புகார் அனுப்பினர். மாவட்ட அளவில் அச்சடிக்கப்பட்ட ரசீது புத்தகங்களையும் மாநிலத் தலைமைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரத்தால் மதுரை மாநகர் பாஜக நிர்வாகிகள் மத்தியில் மோதல் போக்கு உருவாகியுள்ளது. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நன்கொடை வசூல் விவகாரம் பெரியளவில் வெடித்துள்ளது. இந்த விவகாரத்தால் நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் மோதலில் ஈடுபட்டனர்.

இதன் எதிரொலியாக மாநகர் மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு வீட்டுக்கே சென்று சில நிர்வாகிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இது தொடர்பாக பாஜக நிர்வாகிகள் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், மாவட்ட அளவில் ரசீது அச்சடித்து நன்கொடை வசூலித்தது தொடர்பாக விளக்கம் கேட்டு மாநகர் மாவட்ட நிர்வாகிகளுக்கு மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீஸுக்கு மாவட்ட நிர்வாகிகள் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து நன்கொடை வசூலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE