கேட்பாரற்ற 3000+ வாகனங்கள் அகற்றம்: ஏலம் விட காவல் துறையிடம் உதவி கோரும் சென்னை மாநகராட்சி

By ச.கார்த்திகேயன்

சென்னை: சென்னை மாநகரப் பகுதியில் கேட்பாரற்று கிடந்த 3,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியுள்ளது. அவற்றை ஏலம் விட, அவை வழக்குகளில் தொடர்புடையவையா என கண்டறிய மாநகர காவல் துறையின் உதவியை மாநகராட்சி நிர்வாகம் கோரியுள்ளது.

சென்னை மாநகரப் பகுதியில் சாலையோரங்களில் பழுதடைந்த இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்தி வைப்பது மாநகரின் அடையாளமாகவே இருந்து வருகிறது. இதை மாநகராட்சி நிர்வாகமும், போக்குவரத்துக் காவல்துறையும் அவ்வளவாய் கண்டுகொள்வதில்லை. 2018 காலக்கட்டத்தில் சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகமாக இருந்தது. அப்போது, சாலையோரங்களில் கேட்பாரற்று கிடக்கும் பழைய வாகனங்களில் தேங்கும் நீரிலிருந்து டெங்கு பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவது உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அப்போது சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த தா.கார்த்திகேயன் எடுத்த நடவடிக்கை காரணமாக, 5,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அகற்றப்பட்டு ஏலம் விடப்பட்டன. அந்த தொகையானது மாநகரில் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவ பயன்படுத்தப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் சாலையோரங்கள் பழைய வாகனங்கள் நிறுத்துவது வழக்கமாகிவிட்டது.

இந்நிலையில், இதுபோன்ற வாகனங்கள் அகற்றி ஏலம் விடப்படும் என்று மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா மாநகராட்சி மன்றத்தில் அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து, கேட்பாரற்று கிடந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அகற்றப்பட்டுள்ளன. அவற்றை ஏலம் விட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதற்கு தடையில்லா சான்று வழங்குமாறு மாநகர காவல்துறையிடம் மாநகராட்சி கோரியுள்ளது.

இதையடுத்து, மாநகர காவல் துறையானது இந்த வாகனங்கள் வழக்குகளில் தொடர்புடையவையா என ஆய்வு செய்து வருகிறது. இப்பணிகள் முடிவடைய ஓரிரு மாதங்கள் ஆகும். அதன் பின்னரே வாகனங்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE