திமுக, பாஜகவுக்கு பெரிய வித்தியாசமில்லை: நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம்

By செய்திப்பிரிவு

அரியலூர்: திமுக, பாஜகவுக்கு பெரிய வித்தியாசம் எல்லாம் கிடையாது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

நாம் தமிழர் கட்சியின் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அரியலூரில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எக்ஸ் வலைதளத்தில் இருந்து வெளியேறிய வருண்குமார் ஐபிஎஸ்-க்கு வாழ்த்துகள். திமுகவும், பாஜகவும் வேறு வேறு அல்ல. இரு கட்சிகளுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. தங்கள் கட்சியில் 100 சதவீதம் இந்துக்கள் இருப்பதாக பாஜகவினர் கூறுகின்றனர். திமுகவில் 90 சதவீத இந்துக்கள் இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். எனவே, இரண்டுக்கும் 10 சதவீதம்தான் வித்தியாசம்.

விஜய் தனது கட்சி மாநாட்டுக்கு என்னை அழைக்க மாட்டார். அழைக்கவும் கூடாது. அவரது கட்சியின் தொடக்க விழாவுக்கு, மற்றவர்களை அழைக்க மாட்டார்.

நாம் தமிழர் கட்சி எப்போதும் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று நான் முடிவெடுத்து இருக்கிறேன். ஆனால், தேர்தல் காலத்தில் கட்சி நிர்வாகிகள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்து, கூட்டணி குறித்து யோசிப்பேன். 2026-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, 50 தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்துவைத்துள்ளேன். இவ்வாறு சீமான் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE