பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு தலைமைச்செயலக சங்கம் கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: திமுக தனது தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை எள்ளளவும் மாற்றமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தலைமைச்செயலக சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம்.

இத்திட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசின் பணிக்கு கடந்த 2004 ஜன. 1-ம் தேதிக்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பழைய ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக செயல்படுத்தாமல், ஒரு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத்தை உத்தரவாதப்படுத்தும் இலக்கை நோக்கி மத்திய அரசு சென்றுள்ளது என்பதில் மாற்று கருத்தில்லை.

அதோடு மட்டுமின்றி இதுநாள் வரை குடும்ப ஓய்வூதியம் என்பது முற்றிலும் மறுக்கப்பட்ட நிலையில், அதற்கான திறவுகோலுக்கும் மத்திய அரசு வித்திட்டுள்ளது.

25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு முழு ஓய்வூதியம், அதற்கு குறைவான பணிக்காலத்துக்கு விகிதாச்சார அடிப்படையில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.

மக்களவைத் தேர்தலின்போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக எந்த ஒரு வாக்குறுதியும் அளிக்காதபாஜக, மீண்டும் 3 -வது முறையாக ஆட்சியில் அமர்ந்த பின், ஒருங்கிணைந்த ஓய்வூதியம் என்ற வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றை வரும் 2025 ஏப்.1 முதல் நடைமுறைப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு தமிழகத்தில் 2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் உள்ளிட்ட கடுமையான இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தற்போது ஆட்சிப் பொறுப்பில் உள்ள திமுக அரசு, 40 மாதங்கள் கடந்த நிலையில், தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதி திட்டத்தை எள்ளளவும் மாற்றமின்றி நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள தலைமைச் செயலக சங்கம் கேட்டுக் கொள்கிறது என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE