தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை மதியம் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதன் சாதக பாதகம் என்ன ஆதாயம் யாருக்கு ஒரு அலசல்.
அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் அதிமுகவின் ஆட்சி கவிழும் நிலைக்கு கொண்டுச் சென்றது. ஓபிஎஸ்ஸை நீக்கிவிட்டு முதல்வர் ஆகலாம் என்ற சசிகலாவின் முதல்வர் கனவு சிறைத்தண்டனையால் தடைபட கல்யாணத்துக்கு வந்தவர் மாப்பிள்ளை ஆன கதையாக எடப்பாடி முதல்வரானார்.
எந்த ஓபிஎஸ்ஸுக்கு எதிராக எடப்பாடியை கொண்டு வந்தார்களோ தனி ராஜ்யம் வந்தவுடன் இனி டெல்லி தயவு போதும் என முடிவு கட்டி ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்தனர். டிடிவி ஓரங்கட்டப்பட்டார். இணைந்த கைகள் பல்வேறு முடிவுகளை கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் எடுத்தனர்.
டிடிவிக்கு ஆதரவானவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். இதனால் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 21 பேர் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என ஆளுநரிடம் மனு அளிக்க அதில் இருவர் பின் வாங்க ஒருவர் பல்டியடிக்க 18 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க கொறடா கேட்டுக்கொண்டதன் பேரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி சட்டப்பேரவை தலைவர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 எம்.எல்.ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து கடந்த ஜனவரி 23-ந் தேதி தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது.
இதனிடையே ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் அவர்களை தகுதி நீக்கம் செய்ய சட்டப்பேரவை தலைவருக்கு உத்தரவிட வேண்டும் என்ற வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சட்டப்பேரவை தலைவர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது, அவரது அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
மேற்கண்ட உத்தரவால் சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ள 18 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் கட்டாயம் நீதிமன்றம் தலையிடும் என எதிர்ப்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை மதியம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தீர்ப்பு எப்படி வரும் என்ற எதிர்ப்பார்ப்பு பழைய வழக்குகளை வைத்து வாதங்கள் வைக்கப்படுகிறது. டிடிவி ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில் கர்நாடகத்தில் நடந்த எடியூரப்பா வழக்கின் தீர்ப்பை உதாரணம் காட்டியே வாதங்கள் வைக்கப்பட்டன.
டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் போலவே முதல்வர் குறித்து அதிருப்தியை கர்நாடக ஆளுநரிடம் தெரிவித்த பா.ஜ. எம்.எல்.ஏக்கள் நம்பிக்கைத் தீர்மானம் வருவதற்கு முன் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து அவர்கள் நீதிமன்றம் சென்றனர். உயர் நீதிமன்றம் சட்டப்பேரவை தலைவரின் தீர்ப்பு சரிதான் என்று தீர்ப்பளித்தது.
ஆனால் மேல்முறையீட்டில் உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. ஏன் என்றால் கட்சித்தாவல் தடை விதிகளின்படி அவர் போதுமான கால அவகாசம் (நோட்டீஸ்) தரவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வரின் வெற்றி பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே சபாநாயகர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
எனவே எம்.எல்.ஏ-க்களின் தகுதிநீக்க உத்தரவை ரத்து செய்கிறோம்'' என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என டிடிவி தரப்பு நம்புகிறது.
ஆனால் எதிர் தரப்பில் உத்தரகாண்ட் மாநில விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை உதாரணம் காட்டுகின்றனர். கர்நாடக மாநில விவகாரம் 2011 ஆம் ஆண்டு நடந்தது. ஆனால் கடந்த ஆண்டு உத்தரகாண்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 9 பேர் தகுதி நீக்கம் குறித்த வழக்கில் சபாநாயகர் தீர்ப்பு சரி, உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது என்ற வாதம் வைக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மே மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் இதே போன்றதொரு நிகழ்வு நடந்த பொழுது சபாநாயகர் 9 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வர் ஹரீஷ் ராவத்தை மாற்ற வேண்டும் என்று ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர்.
அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து அம்மாநில உயர் நீதிமன்றத்தில் 9 எம்.எல்.ஏக்களும் வழக்குத் தொடர்ந்தனர். தாங்கள் காங்கிரஸ் கட்சியிலேயே தொடருவதாகவும், முதல்வரை மாற்ற வேண்டும் என்ற தங்களது கோரிக்கை ஜனநாயக மரபுதான் என்றும், தகுதி நீக்கம் செய்தது செல்லாது என அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களது மனுவில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கு ஆதரவாக சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளார் என்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அதே நேரத்தில் முதல்வர் மீது ஆளுநரிடம் முறையிடச் சென்ற பாஜக எம்எல்ஏக்களுடன் அதிருப்தி எம்எல்ஏக்கள் சென்றது கட்சித் தாவல்தான் என காங்கிரஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் வாதிட்டார்.
இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி யூ.சி.தியானி தீர்ப்பளித்தார். தகுதி நீக்கத்தை எதிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அத்துடன் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றனர். ஆனால் உச்ச நீதிமன்றம் சபாநாயகர் உத்தரவை ஏற்று உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். ஆனால் இதில் சிறிய வித்தியாசம் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜக எம்.எல்.ஏக்களுடன் சென்று மனு அளித்தனர்.
ஆனால் தினகரன் தரப்பில் அவர்கள் தனி அணியாக சென்று மனு அளித்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே உத்த்ரகாண்ட் மாநில பிரச்சினையும் அதையொட்டி வந்த தீர்ப்பையும் இதில் பொறுத்தி பார்க்க முடியாது என்றும் சிலர் வாதம் வைக்கின்றனர்.
தீர்ப்பில் தகுதி நீக்கம் செல்லும் என்று வரலாம், தகுதி நீக்கம் செல்லாது என்று வரலாம், மாறுபட்ட கருத்து இருக்கும்பட்சத்தில் வேறு அமர்வுக்கோ அல்லது கூடுதல் எண்ணிக்கை கொண்ட அமர்வுக்கோ வழக்கு மாற்றப்படலாம். தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வரும் பட்சத்திலும், செல்லும் என்று தீர்ப்பு வரும் பட்சத்திலும் பெரிதாக மாற்றம் எதுவும் வரும் சாத்தியமில்லை.
காரணம் தீர்ப்பு சாதகமாக வரவில்லை என்று கருதுபவர்கள் மேல்முறையீட்டிற்காக உச்சநீதிமன்றம் செல்லும் வாய்ப்பு உள்ளதால் வேறு எதுவும் நடக்க வாய்ப்பில்லை. ஏற்கனவே 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வராமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்ற ஒரு இடைக்கால உத்தரவு உள்ள நிலையில் தீர்ப்பு தினகரன் தரப்புக்கு ஆதரவாக வந்தால், நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த தடையும் நீக்கப்படும்.
அவ்வாறு நடந்தால் ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும், ஆனால் இதை தவிர்க்க மாநில அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும், மேல் முறையீடு மட்டுமல்ல உயர் நீதிமன்ற தீர்ப்புக்கும் தடை வாங்கினால் மட்டுமே நம்பிக்கை வாக்கெடுப்பை நடக்காமல் பார்த்துக்கொள்ள முடியும். இது ஒரு வகை.
ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த வழக்கு தனிவழக்கு அது இதனுடன் வராது என்றும் தெரிவிக்கின்றனர். அப்படி இருக்கும் பட்சத்தில் அரசு தரப்பு மேல்முறையீட்டிற்கு செல்லும். வேறு எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை.
அடுத்து அரசுக்கு ஆதரவாக சட்டப்பேரவை தலைவர் நடவடிக்கை சரிதான் என்று தீர்ப்பு வந்தால் டிடிவி தரப்பினர் மேல்முறையீட்டிற்கு செல்வார்கள், அதனால் அரசுக்கு உடனடியாக எந்த பாதிப்பும் ஏற்படாது. மூன்றாவதாக தீர்ப்பை வேறு அமர்வுக்கோ, கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கோ மாற்றி உத்தரவிட்டால் வழக்கும் மீண்டும் தள்ளிப்போகும் அப்படிப்போனாலும் அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
மேற்கண்ட மூன்று அம்சங்கள் மட்டுமே இந்த தீர்ப்பை ஒட்டி நடக்க வாய்ப்புள்ளது என்பது சட்ட வல்லுனர்களின் கூற்றாக உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 mins ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago