பழநியில் கோலாகலமாக நடந்த முத்தமிழ் முருகன் மாநாடு நிறைவு: 21 தீர்மானங்கள் நிறைவேற்றம் 

By ஆ.நல்லசிவன்

பழநி: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழநியில் இரண்டு நாட்கள் கோலாகலமாக நடந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நிறைவடைந்தது. மாநாட்டில் சித்த மருத்துவத்தை 'தமிழர் சித்த மருத்துவம்' என அழைப்பது உட்பட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் பெருமையை உலகில் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழநி பழனியாண்டவர் கல்லூரியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது.

முதல் நாளான நேற்று (ஆக.24) சென்னை முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கினார். 100 அடி கம்பத்தில், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், மாநாட்டு இலச்சினை பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, மாநாடு ஆய்வு மலர் வெளியிடப்பட்டது. ஆன்மிக அன்பர்கள், ஆதீனங்கள், நீதிபதிகள், வெளிநாட்டைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு பேசினர். இந்த மாநாட்டில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

மாநாட்டின் 2-வது நாளான ஞாயிற்றுக்கிழமை (ஆக.25) காலை ஓதுவார் குழுவினரின் இசை நிகழ்ச்சிகள், இறை வணக்கத்துடன் விழா தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் பூங்கொடி வரவேற்றார். அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலர் சந்திரமோகன், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆணையர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவை, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்து பேசியதாவது: “இந்தியாவிலேயே அதிகமாக கோயில்கள் இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு தான். அதில், பிரசித்தி பெற்ற கோயில்கள் அனைத்தையும் புனரமைக்கும் முயற்சி எடுத்து அதில் அமைச்சர் சேகர் பாபு வெற்றி கண்டிருக்கிறார். முன்னாள் முதல்வர் கருணாநிதி ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தவர். அதேபோல், முதல் முறையாக பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார்.

அறுபடை வீடுகள் இருந்தாலும் 3-ம் படை வீடான பழநி முருகன் கோயிலில் 2-வது ரோப்கார் அமைக்கும் திட்டம், சித்த மருத்துவ கல்லூரி என ல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது” இவ்வாறு சக்கரபாணி பேசினார்.

இதையடுத்து, மாநாடு விழா மலரை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் வெளியிட, கோவை கவுமார மடம் ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் பெற்றுக் கொண்டார். பின்னர், நீதிபதி பேசியதாவது: “ஒரு தமிழ் ஆன்மீக மாநாடாக, அதிலும் முருகப் பெருமானுடைய பெயரை தாங்கி உலக அளவில் நடைபெறுகின்ற முதல் மாநாடு இது தான். முருகன் தமிழ் கடவுள். தமிழுக்கு மாநாடு நடத்தினாலே அது முருகனுக்கான மாநாடு தான்.

முருகன் தமிழ் கடவுள் என்பதற்கு ஏராளமான இலக்கியச் சான்றுகள் உள்ளன. எந்த மார்க்கத்தில் பார்த்தாலும் முருகப்பெருமான் தான் முழு முதல் தமிழ் கடவுள். தமிழ் கடவுளான முருகனை அறிந்து, தமிழ் மொழியின் செழுமையை உணர்ந்து, முருகன் தான் தமிழ், தமிழ் தான் முருகன் என்று உணர்ந்து இன்றைக்கு இந்த மாநாட்டை நடத்தி வருகின்ற அரசும், அறநிலையத்துறையும் பாராட்டுக்குரியது.

முருகனை வழிபட வேண்டும் என்று நினைப்பவர்கள் முருகனின் அருளை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள், அவர்களை நெறிப்படுத்தி ஆற்றுப்படுத்துவதற்காக படைக்கப்பட்டதே திருமுருகாற்றுப்படை. இந்த மாநாட்டின் மூலமாக தமிழ் வென்று இருக்கிறது, முருகன் வென்று இருக்கிறான்” இவ்வாறு நீதிபதி சுரேஷ்குமார் பேசினார்.

அவரைத் தொடர்ந்து, மொரீசியஸ் தமிழ்க் கோயில்கள் கூட்டிணைப்பு தலைவர் செங்கண் குமரா பேசுகையில், “மொரீசியஸில் ஏராளமான கோயில்கள் உள்ளன. அங்கு ஆண்டுதோறும் முருகனுக்கு தைப்பூச திருவிழா, பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடத்துகிறோம். உலக முழுவதும் உள்ள முருக பக்தர்களை ஒன்றிணைத்து இந்த மாநாடு நடத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

நிகழ்ச்சியில், திண்டுக்கல் எம்.பி.சச்சிதானந்தம், செந்தில்குமார் எம்எல்ஏ, கோவை கவுமார மடம் ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் உள்ளிட்டோர் பேசினர். பின்னர், இசை மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலையில் சென்னையில் இருந்தபடி காணொலி வாயிலாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநதி ஸ்டாலின் பேசினார்.

நிறைவு விழாவில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நினைவாக பழநியில் ‘வேல்’ நிறுவுவது, வெளிநாட்டில் வாழும் முருக பக்தர்கள் தமிழகத்திற்கு வருகை தரும் போது திருவிழா மற்றும் சிறப்பு காலங்களில் வழிபாட்டிற்கு உதவும் வகையில் மொபைல் செயலி மூலம் வழிபாட்டு வசதிகள் செய்து தருவது, சித்த மருத்துவத்தை இனி வரும் காலங்களில் ‘தமிழர் சித்த மருத்துவம்’ என அழைக்க அரசுக்கு பரிந்துரைப்பது என்பன உட்பட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய 16 பேருக்கு போகர் சித்தர் விருது, நக்கீரர் விருது, முருகம்மையார் விருது என்று 16 முருகனடியார்களின் பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை வழங்கி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், திருவாடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஆகியோர் பேசினர்.

நிறைவாக, கூடுதல் ஆணையர் ரா.சுகுமார் நன்றி கூறினார். முன்னதாக, அமைச்சர் சேகர்பாபுவுக்கு, பழநி முருகன் கோயில் அறங்காவலர் சார்பில் வேல் கொடுத்து கவுரவிக்கப்பட்டார். மாநாட்டின் 2-வது நாளான ஞாயிற்றுகிழமையும் காலை முதலே வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழா அரங்கம் ஆயிரக்கணக்கான பக்தர்களால் நிரம்பி வழிந்தது. முருகனின் பெருமைகளை கூறும் ஆன்மிக சொற்பொழிவு, கருத்தரங்கின் மூலம் பக்தி பரவசமடைந்தனர். தொடர் விடுமுறையையொட்டி, மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பார்ப்பதற்காக குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர். குறிப்பாக, மாற்று மதத்தினரும் அதிக அளவில் வந்திருந்தனர்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து கண்காட்சியை கண்டு ரசித்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, 3-டி அரங்கம் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டியில் அறுபடை வீடுகள் மற்றும் முருகனின் பெருமைளை பிரத்யேக கண்ணாடி அணிந்து பார்த்து வியந்தனர். மாற்றுத்திறனாளிகள், நடக்க முடியாத முதியவர்களை தன்னார்வலர்கள் மூலம் வீல் சேரில் அழைத்துச் சென்று கண்காட்சியை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்றும் (ஆக.25) மாநாட்டில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக பிரசாதப் பைகள் மற்றும் 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது. நேற்றுடன் மாநாடு நிறைவடைந்த நிலையில் கண்காட்சி அரங்கை, பொதுமக்கள் பார்வையிடுவதற்காக ஆக.30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE