‘‘நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதை ஏற்க முடியாது’’ - தெலங்கானா முதல்வர்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை மக்கள் பிரதிநிதிகளான தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். அதன் காரணமாகவே ஹைதராபாத் பேரிடர் மீட்பு, இயற்கை அரண்கள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு முகமை (HYDRAA) மூலம் தகுந்த நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரேவந்த் ரெட்டி, "இந்த அரசு, அரசியல் காரணங்களால் இதனை செய்யவில்லை. எதிர்கால தலைமுறையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது. எந்தவிதமான அழுத்தத்துக்கும் அடிபணிய மாட்டோம். ஆக்கிரமிப்புகள் மீது கடும் நடவடிக்கை நிச்சயம் எடுப்போம்.

மக்கள் பிரதிநிதிகளான எங்களால் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் தான் ஹைட்ரா மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார். மேலும், நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கிய நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பது கவலை அளிக்கிறது" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்று (சனிக்கிழமை) மாதாப்பூரில் திம்மடி குண்டா ஏரியின் ஆக்கிரமிப்புகளை முதலில் அகற்ற தீர்மானித்து, அப்பகுதியில் பல கட்டிடங்களை போலீஸ் பாதுகாப்புடன் ஹைட்ரா அமைப்பினர் இடித்தனர். அங்கு நடிகர் நாகார்ஜுனா ‘என் கன்வென்ஷன்’ எனும் பெயரில் திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டியுள்ள நிலையில் அதனை ஆய்வு செய்த அதிகாரிகள், சுமார் 3.5 ஏக்கர் வரை ஏரி நிலத்தை ‘என் கன்வென்ஷன்’ ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி அந்த கட்டிடங்களை இடித்தனர். இது தொடர்பாக ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் நாகார்ஜூனா அவசர மனு தாக்கல் செய்தார். கட்டிடங்களை இடிக்க தடை விதிக்க வேண்டும் என்று அவரது கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE