தொடர் விடுமுறையால் குவிந்த சுற்றுலா பயணிகள் - களைகட்டிய கன்னியாகுமரி

By எல்.மோகன்

நாகர்கோவில்: 3 நாள் தொடர் விடுமுறையால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்கள் அனைத்தும் களைகட்டின.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வாரவிடுமுறை, பண்டிகை, தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். நாளை கிருஷ்ணஜெயந்தி விடுமுறை. அதோடு, முந்தைய இரு நாட்களும் சனி, ஞாயிறு விடுமுறை என தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை உள்ளது.

இதனால் தமிழகம் மட்டுமின்றி கேரளா, பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குடும்பத்துடன் சுற்றுலா திட்டங்களை வகுத்து கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை மாலையில் இருந்தே குவிய துவங்கினர். கன்னியாகுமரியில் உள்ள அரசு, மற்றும் தனியார் தங்கும் விடுதிகளில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பி வழிகின்றன. அறை கிடைக்காதவர்கள் நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல், களியக்காவிளை பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்குகியுள்ளனர்.

கன்னியாகுமரியில் இன்று அதிகாலையில் சூரிய உதயத்தை பார்ப்பதற்காக முக்கடல் சங்கமம், பகவதியம்மன் கோயில் வளாகம், காட்சி கோபுரம், கடற்கரை சாலை, விவேகானந்தா கேந்திரா கடற்கரை வளாகம் போன்றவற்றில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. சுற்றலா பயணிகள் குடும்பத்துடன் நின்று திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறையின் பின்னணியுடன் கூடிய சூரிய உதயத்தை செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இதைப்போன்று விவேகானந்தர் பாறைக்கு இன்று காலையில் இருந்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு இல்லத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து சென்று வந்தனர். கன்னியாகுமரியின் பிற சுற்றுலா மையங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. சூழியல் பூங்கா, விவேகானந்தா கேந்திரா ராமாயண கண்காட்சி கூடம், அருங்காட்சியகம் போன்றவற்றில் சுற்றுலா பயணிகள் அதிகமாக காணப்பட்டனர்.

திற்பரப்பு அருவியில் 6 நாள் தடைக்கு பின்னர் சுற்றுலா பயணிகள் இன்று அனுமதிக்கப்பட்டனர். இதனால் அங்கு திரண்ட சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளியலிட்டு மகிழ்ந்தனர். திற்பரப்பு செல்லும் வழியில் குலசேகரத்தில் இருந்து வாகனங்கள் நெருக்கடி காணப்பட்டது. மேலும் வட்டக்கோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, உதயகிரி கோட்டை, மாத்தூர் தொட்டிப்பாலம் போன்ற சுற்றுலா மையங்களும் களைகட்டியிருந்தன. நாளை கன்னியாகுமரியில் மேலும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள் என சுற்றுலா துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE