கட்சி கொடியை ஏற்ற தவெக நிர்வாகிகளுக்கு காவல்துறை கெடுபிடி என புகார்

By துரை விஜயராஜ்

சென்னை: பொது இடங்களில் அனுமதி பெற்று கட்சி கொடி ஏற்ற வேண்டும் என தவெக நிர்வாகிகளுக்கு காவல்துறை அறிவுறுத்தி வருகிறது.

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியதில் இருந்தே அக்கட்சி பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. முதலில் ‘தமிழக வெற்றி கழகம்’ என இருந்த கட்சியின் பெயரில், இலக்கணப் பிழை இருப்பதாக சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகின. இதையடுத்து, இந்த விமர்சனத்துக்கு முற்றிப்புள்ளி வைக்கும் வகையில், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என கட்சி பெயரில் இருந்த பிழை சரி செய்யப்பட்டது.

இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தில் ஆங்கில சுருக்கெழுத்து ‘டிவிகே’ என்றும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஆங்கில சுருக்கெழுத்து ‘டிவிகே’ என்றும் பொருள்படுவதால், தமிழக வாழ்வுரிமை கட்சியினர், விஜய் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை நடத்துவதற்காக இடம் தேர்வு செய்யவதில் பல்வேறு சிக்கல்களை நடிகர் விஜய் சந்தித்து வருகிறார்.

நெல்லை, மதுரை, சேலம், ஈரோடு, திருச்சி என ஆலோசித்து இறுதியாக விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டது என தகவல் வெளியான நிலையில், தற்போது வேறு இடம் தேர்வாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், விஜய் கட்சி கொடியை கடந்த 22-ம் தேதி அறிமுகம் செய்தார். கட்சிக் கொடியை அறிமுகம் செய்ததில் இருந்தே, தொடர் விமர்சனங்களை தமிழக வெற்றிக் கழகம் சந்தித்து வருகிறது.

அதுஒருபுறமிருக்க, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்றும், நிர்வாகிகள் அனைவரும் உரிய அனுமதியுடன் பொது இடங்களிலும், தங்களது வீட்டிலும் கட்சி கொடியை ஏற்ற வேண்டும் என்றும் விஜய் அறிவுறுத்தி இருந்தார். இதற்காக கொடிகள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. இதையடுத்து, நேற்று 234 தொகுதிகளிலும், தவெக நிர்வாகிகள் கட்சி கொடியை பொது இடங்களில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்கள் உள்பட பல்வேறு பொது இடங்களில் கட்சி கொடியை உரிய அனுமதி பெற்று நிர்வாகிகள் ஏற்றினர். ஆனால், பல இடங்களில் காவல்துறை அனுமதியின்றி நிர்வாகிகள் கட்சி கொடியை ஏற்றியதால், கொடி கம்பம் வைத்து, கொடியேற்றுவதற்கு காவல்துறை அவர்களை அனுமதிக்கவில்லை. இதனால், போலீஸாருக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தங்களது வீட்டின் முன்பு கூட தவெக கொடியை ஏற்றக்கூடாது என, இதுவரை வேறு எந்த கட்சிக்கும் இல்லாத வகையில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு போலீஸார் அதிக கெடுபிடி கொடுப்பதாக நிர்வாகிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

ஆனாலும், உரிய அனுமதி பெற்று தான் கட்சி கொடியை பொது இடங்களில் ஏற்ற வேண்டும் என்று, தவெக நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தி இருக்கிறது. அனுமதியின்றி கொடியை ஏற்றி பிரச்சினையில் ஈடுபட்டால், கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து இருக்கிறது. இதையடுத்து, உரிய அனுமதி பெற்று கட்சியை வைக்கும் பணிகளில் தவெக நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE