‘‘கோரமண்டல் அமோனியா ஆலை திறப்பின் பின்னணி குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்’’: அன்புமணி

By செய்திப்பிரிவு

சென்னை: கோரமண்டல் அமோனியா ஆலை மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், மக்களை விலைக்கு வாங்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விசாரணை வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அமோனியா வாயுக்கசிவு காரணமாக கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த எண்ணூர் கோரமண்டல் அமோனியா ஆலை, தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியைத் தொடர்ந்து மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடத்தப்பட்ட திரைமறைவு நடவடிக்கைகள் குறித்து ’தி நியூஸ் மினிட்’ இணைய இதழ் வெளிக்கொண்டு வந்துள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியும், கவலையும் அளிப்பவையாக உள்ளன.

2023-ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் கோரமண்டல் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவு காரணமாக ஆலை மூடப்பட்டது. அந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று நான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினோம். இதே கோரிக்கையை வலியுறுத்தி அந்த ஆலையால் பாதிக்கப்பட்ட 33 கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். அவ்வாறு போராடிய மக்களை விலைக்கு வாங்கும் வகையில் அவர்களுக்கு கையூட்டு வழங்கப்பட்டுள்ளது என்பது தான் ’தி நியூஸ் மினிட்’ இணைய இதழின் விசாரணையில் தெரியவந்துள்ள செய்தியாகும்.

‘‘ கோரமண்டல் ஆலைக்கு மிகவும் நெருக்கமாக உள்ள 4 மீன்பிடி கிராமங்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த 4 கிராமங்களில் தாழங்குப்பம், நெட்டுக்குப்பம் ஆகிய இரு கிராமங்களுக்கு தலா ரூ. 1 கோடி வீதமும், பெரியக்குப்பம், சின்னக்குப்பம் ஆகியவற்றுக்கு முறையே ரூ.50 லட்சம், ரூ.35 லட்சமும் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள கிராமக்குழுக்களில் இடம் பெற்றுள்ள ஓவ்வொருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதமும், கைம்பெண்களுக்கு தலா ரூ.5,000 வீதமும் வழங்கப்பட்டுள்ளது. பணம் கொடுத்தவர்கள் யார்? என்பது தெளிவாகத் தெரியாத நிலையில், திருவொற்றியூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர் தான் பொதுமக்களுக்கும், ஆலை நிர்வாகத்துக்கும் இடையே பேச்சுகளுக்கு ஏற்பாடு செய்தார்’’ என்று ’தி நியூஸ் மினிட்’ இதழ் கூறியுள்ளது.

இதை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சங்கரும், ஆலை நிர்வாகமும் தனித்தனியாக மறுத்துள்ள போதிலும், இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாகவே அப்பகுதி மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கூறியுள்ளனர். கோரமண்டல் ஆலையை தொடர்ந்து இயங்கச்செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள அறத்திற்கு எதிரான இந்த செயல்கள் கண்டிக்கத்தக்கவை.

இதை தமிழக அரசு அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதும் சரியல்ல. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை காப்பாற்றுவதற்காக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கும், கோரமண்டல் ஆலையைக் காப்பாற்றுவதற்காக உண்மையும் நீதியும் படுகொலை செய்யப்படுவதற்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை.

கிராம மக்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்து தமிழக அரசின் கையூட்டு தடுப்புப் பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளின் விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழு வலியுறுத்தியுள்ளது.

கோரமண்டல் அமோனியா ஆலையை மீண்டும் திறப்பதற்காக நிகழ்த்தப்பட்ட அனைத்து வகையான சித்து விளையாட்டுகள் குறித்த உண்மைகளும், அதன் பின்னணியில் இருந்தவர்கள் குறித்த விவரங்களும் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும். எனவே, இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE