விஜய் உடனான சந்திப்பு கூட்டணிக்காக இல்லை: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு, 71 டாட்டு கலைஞர்களால் 71 பேருக்கு 71 நிமிடங்களில் விஜயகாந்தின் முகம் கையில் டாட்டுவாக வரையும் சாதனை நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வு கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ளது. இந்நிகழ்வை கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தவெக தலைவர் விஜய்யுடனான சந்திப்பு கூட்டணிக்கானது அல்ல. நட்புணர்வோடு நடைபெற்ற ஒன்று. விஜய் எங்களுக்கு புதியவர் கிடையாது. தனது கட்சியின் கொடி அறிமுகத்துக்கு முன்பாக எங்களது வீட்டுக்கு வந்து, மறைந்த தலைவர் விஜயகாந்தின் படத்துக்கு மரியாதை செலுத்தி, ஆசீர்வாதம் வாங்கி சென்றார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

விஜய் புத்திசாலியான, அமைதியான பையன். நிச்சயமாக பிரச்சினைகளை எல்லாம் சமாளிப்பார். அதேபோல விஜய் திரை உலகில் நிறைய சவால்களை சந்தித்து இருக்கிறார். ஆனால் அரசியலை சினிமா போன்று எடுத்துக் கொள்ள முடியாது. அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் யோசித்து தான் எடுத்து வைக்க வேண்டும். இது ஒரு குடும்ப சந்திப்பு போன்றுதான் எங்களுக்கு அமைந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE