சென்னை: “மனந்திறந்து என்னை ஊக்கப்படுத்தக்கூடிய வகையில் பேசிய ரஜினிகாந்துக்கு நன்றி. என்னைவிட அவர் ஒரு வயது கூடதான், அறிவுரையும் சொன்னார். அவர் சொன்ன அத்தனையையும் நான் புரிந்துகொண்டேன். பயப்பட வேண்டாம். எதிலும் நான் தவறிவிடமாட்டேன்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை - கலைவாணர் அரங்கில் அமைச்சர் எ.வ. வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியது.
“கலைஞர் எனும் தாய் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய கழகத்தின் பொதுச் செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களே, கழகப் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலு, சிறப்பாக உரையாற்றி அமர்ந்திருக்கக்கூடிய பாசத்திற்குரிய ரஜினிகாந்த், வரவேற்புரை நல்கிய உதயநிதி, இந்த நூலின் ஆசிரியர் எ.வ.வேலு, வாழ்த்துரை வழங்கியிருக்கக்கூடிய தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இந்து குழுமத்தின் தலைவர், என்னுடைய மதிப்பிற்குரிய இந்து ராம் மற்றும் பல்வேறு தோழமைக் கட்சிகளைச் சார்ந்திருக்கக்கூடிய தலைவர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, அரசு உயர் அலுவலர்களே, சீதை பதிப்பகத்தின் கௌரா ராஜசேகர், வருகை தந்துள்ள அனைவருக்கும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளே, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்துள்ள கழக நிர்வாகிகளே, பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினர், என் உயிரோடு கலந்திருக்கக்கூடிய தலைவர் கருணாநிதியின் உயிரினும் உயிரான உடன்பிறப்புக்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.
» இன்பினிக்ஸ் நோட் 40 புரோ+ ரேஸிங் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
» இயக்குநர் சுசீந்திரனின் ‘2K லவ் ஸ்டோரி’ படப்பிடிப்பு நிறைவு!
‘தாய்’ காவியத்தை கவிதை நடையில் தீட்டிய தலைவர் கருணாநிதிக்கு தமிழோவியம் தீட்டி இருக்கிறார் நம்முடைய ஆருயிர் சகோதரர் வேலு. புத்தகத்தின் தலைப்பைப் பாருங்கள்… ‘கலைஞர் எனும் தாய்’! எத்தனை பொருத்தம்.
இந்த தலைப்பிலேயே மொத்தமும் அடங்கி இருக்கிறது. தலைவர் கருணாநிதி, தாய் காவியம் தீட்டியவர் மட்டுமில்லை, அவர் தாயாகவும் வாழ்ந்தார். எனக்குத் தந்தை மட்டுமல்ல, தாயும் அவர்தான். எனக்கு மட்டுமல்ல, எ.வ.வேலு அவர்களைப் போல லட்சோப லட்சம் உடன்பிறப்புகளுக்குத் தந்தையாய், தாயாய், தலைவராய் இருந்து, நம்மையெல்லாம் வளர்த்து, போற்றிய அற்புத ஆளுமைதான் தலைவர் கருணாநிதி.
கழகத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமில்லை, பல்வேறு துறைகளைச் சார்ந்திருக்கக்கூடிய பலரையும் அரவணைத்தவர். அதன் அடையாளமாகத்தான், ரஜினி, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இந்து என்.ராம் ஆகியோர் இந்த மேடையில் இருக்கிறார்கள்.
இவர்கள் எல்லாம் தலைவர் கருணாநிதியுடன் நெருங்கிப் பழகியவர்கள். அவர்களும் கருணாநிதியின் உடன்பிறப்புகள்தான். அப்படித்தான், வேறுபாடு இல்லாமல் அனைவரின் மேலும் அன்பு செலுத்துபவராக நம்முடைய தலைவர் இருந்தார். தலைவரின் தாய், அதாவது என்னுடைய பாட்டி அஞ்சுகம் அம்மாள் அவரைப் பற்றி மிக மிக உருக்கமாக தலைவர் கருணாநிதி எழுதுவார். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், அதைவிட உருக்கமாக எழுதியவர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி அவர்களும்.
அஞ்சுகம் அம்மையார் தங்களுக்கு எப்படியெல்லாம் உணவூட்டி, அன்பு காட்டி வளர்த்தார் என்று அவர்கள் பேசியிருக்கிறார்கள். தன்னுடைய தாயை பெரிதும் போற்றி, தானும் தாயுள்ளத்துடன் செயல்பட்டவர் கருணாநிதி.
அப்படிப்பட்ட அவருக்கு “கலைஞர் எனும் தாய்” என்ற நூல் தலைப்பு மிக மிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. எல்லோரும் சொன்னார்கள். தலைவர் அவர்கள் எ.வ.வேலுவை பாராட்டும்போது, ‘எ.வ.வேலு என்றால் “எதிலும் வல்லவர்”’ என்று பாராட்டுவார். அவரிடம் அப்படி பெயர் வாங்குவது சாதாரண விஷயமில்லை. அது அவருடன் பழகிய அத்தனை பேருக்கும் நன்றாக தெரியும். அதிலும் சீனியர் துரைமுருகனுக்கு நன்றாக தெரியும்.
2011-ம் ஆண்டு வேலுவின் மகன் கம்பன் திருமணத்தை நடத்தி வைத்து முதல்வராக இருந்த தலைவர் கருணாநிதி பேசிய போது, குறிப்பிட்டுச் சொன்னார்கள்.
அப்போது உணவுத்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதைக் குறிப்பிட்டதுடன், ரேஷன் கடைகள் செயல்பாட்டைப் பாராட்டி, “தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் பாராட்டியதைச் சொல்லி, “வேலுவைப் போன்ற ஆற்றல் பெற்றவர்களாக அனைத்து அமைச்சர்களும் வரவேண்டும் என்று பாராட்டினார்.
அதேபோல, தலைவர் கருணாநிதி சொன்ன இன்னொரு முக்கியமான பாராட்டும் இருக்கிறது… ‘நான் மனதில் என்ன நினைக்கிறேனோ அதை என் வாயால் சொல்லாமலேயே, என் கண் அசைவின் மூலமாகவே அதை உணர்ந்து செய்து முடிக்கின்ற ஆற்றல் உள்ளவர்களில் தம்பி வேலு முதலிடத்தில் இருக்கிறார்’ என்று பாராட்டினார்.
இன்று எனக்கும் அதேபோலதான் வேலு இருக்கிறார். ஆறாவது முறை கழக ஆட்சி அமைந்ததும் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பொறுப்பை நான் வேலு வசம் ஒப்படைத்தேன்.
சென்னை, கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம், திருவாரூரில் கலைஞர் கோட்டம் ஆகியவை வேலுவின் திறமைக்குச் சாட்சியங்களாக இன்றைக்கும் விளங்கிக் கொண்டிருக்கிறது
அண்ணா அறிவாலயத்திலும், முரசொலி அலுவலகத்திலும் அமைக்கப்பட்ட கலைஞர் சிலைகளை அமைத்தவரும் அவர்தான். இவை எல்லாவற்றுக்கும் தலையாய சாதனைதான் கடற்கரையில் அமைந்திருக்கின்ற ‘கலைஞர் உலகம்’ அதைத்தான் ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.
அதைப் பார்க்கிறவர்கள் எல்லோரும் வியந்து போகும் அளவுக்கு அதை அமைத்துத் தந்தவர் நம்முடைய வேலு. அவர் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மட்டுமில்லை, கழகத்தைப் பொறுத்தவரைக்கும் சொல்ல வேண்டும் என்றால், சிலைகள் துறை, மணிமண்டபங்கள் துறை, விழாக்கள் ஒருங்கிணைப்புத் துறை, சிறப்பு மலர்கள் தயாரிப்புத் துறை, புத்தகங்கள் அச்சிடும் துறை, நினைவுப் பரிசுகள் வழங்கும் துறை என்று எத்தனையோ துறைகள் வேலு வசம்தான் இப்போதும் இருக்கிறது.
அதுமட்டுமல்ல, திரைப்படம் எடுத்திருக்கார், கூத்து கட்டுவார், சினிமாவிலும், நாடகத்திலும் நடித்திருக்கிறார். எத்தனை வேலைகள் கொடுத்தாலும், அவை அத்தனையும் சிறப்பாகச் செய்து காட்டும் வல்லமை வேலுவுக்கு உண்டு.
எல்லோரும் சொன்னதுபோல, எதிலும் வல்லவரான வேலு, எழுத்திலும் வல்லவர் என்று இந்தப் புத்தகத்தின் மூலமாக. இன்றைக்கு நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட வேலு, திருக்குறளையும், தலைவர் கருணாநிதியையும் இணைத்தும் பிணைத்தும் இந்த நூலை எழுதி இருக்கிறார். திருக்குறள் பாதையில் கருணாநிதி எப்படி நடந்து காட்டுவார் என்று பொருத்தமான குறள்களை தேர்ந்தெடுத்து, இணைத்து எழுதி இருக்கிறார். இந்தப் புத்தகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு கட்டுரைகளின் தலைப்புகளுமே, தனியாக ஒரு புக் டைட்டில் மாதிரி இருக்கிறது!
கருணாநிதி எழுதினால், தமிழ் கொட்டும் என்பது எவ்வளவு உண்மையோ, அதுபோல அவரை பற்றி எழுதினாலும் தமிழ் கொட்டும் என்பதற்கு “கலைஞர் எனும் தாய்” நூலும் ஒரு எடுத்துக்காட்டு.
மிசா காட்சிகளை விவரிக்கும்போது நானும் இந்தப் புத்தகத்தில் வருகிறேன். நான் தாக்கப்பட்ட காட்சிகளையும் இந்தப் புத்தகம் சொல்கிறது. அந்தக் காலக்கட்டத்தில் தலைவர் கருணாநிதி எப்படி செயல்பட்டார் என்று வேலுவின் சொற்களில் படிக்கும்போது நான் உணர்ச்சிவசப்பட்டேன்.
எனக்கு ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. மிசாவில் கைது செய்யப்பட்ட கழக உடன்பிறப்புகளை, அவர்கள் குடும்பங்கள் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று தலைவர் கருணாநிதி சிறைத்துறையிடம் சென்று வாதாடுகிறார். ஆனால், அவர்கள் என்னை மட்டும், உங்கள் மகனை மட்டும் நீங்கள் சந்திக்க அனுமதி தருகிறோம் என்று சொன்னார்கள். ஆனால், அந்தச் சமயத்திலும் மற்ற கழகத் தோழர்கள் அவர்கள் குடும்பங்களைச் சந்திக்க அனுமதித்த பிறகுதான் என்னுடைய மகனை நான் சந்திப்பேன் என்று சொன்னார். கடைசியாகதான் என்னை வந்து சந்தித்தார். அப்படிப்பட்ட அவரை நினைத்தாலே நம்முடைய உள்ளத்தில் ஒலிக்கின்ற குரல்…“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே…” அது ஏதோ வார்த்தை அலங்காரம் இல்லை. உயிரினும் மேலானவர்களாக உடன்பிறப்புகளை மதித்தார் தலைவர் கருணாநிதி. இந்தப் புத்தகத்தில் நான் மட்டுமில்லை, உதயநிதியும் இருக்கிறார்.
1977-ம் ஆண்டு சென்னை மத்திய சிறையில் இருந்து தலைவர் கருணாநிதி எனக்கு எழுதிய கடிதத்தில், “1953-ம் ஆண்டு நான் திருச்சி சிறையில் இருந்தபோது நீ கைக்குழந்தை. உன் அம்மா தூக்கிக் கொண்டு வந்து சிறையில் காண்பித்தார்கள். இப்போதும் நான் சிறையில் இருக்கிறேன், உனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான். அந்தப் பேரனும் என்னைப் பார்க்க சிறைக்கு வருவான்” இந்த அனுபவங்கள் எல்லாம் எவ்வளவு இனிமையானவை பார்த்தாயா. இந்தக் குடும்பத்தில் மட்டுமல்ல, நமது இயக்கமாம் இந்தப் பெரிய குடும்பத்தில் எத்தனையோ உடன்பிறப்புகளுக்கு இப்படிப்பட்ட சிறை அனுபவங்கள் வாய்க்கும்” என்று எனக்கு எழுதினார். இதுபோல, பல செய்திகள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.
கருணாநிதியின் வரலாற்றுடன் கழக வரலாறும் இதில் இருப்பதைத்தான் இந்த நூலின் மிக மிகச் சிறப்பானதாக நான் கருதுகிறேன். “சோதனை எனும் நெருப்பில் புடம் போட்ட சொக்கத் தங்கமாக விளங்கும் வரலாற்றுக்கு உரிமை படைத்த ஒரு பேரியக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்” என்று எழுதி இருப்பதைப் படிக்கும்போது இந்த இயக்கத்தின் தலைவன் என்ற முறையில் நான் பெருமைப்படுகிறேன்.
இந்திய வரைபடத்தில் பெரிய எழுத்தில் குறிப்பிடப்படாத திருக்குவளை என்ற சிற்றூரில் பிறந்த கருணாநிதிக்கு இன்று இந்திய அரசே நாணயம் வெளியிடுகிறது என்றால், ‘அத்தகைய புகழ்மிக்க தலைவரின் உடன்பிறப்புகள்தான் நாம்’ என்பதைவிட, நமக்கு என்ன பெருமை வேண்டும். அவருடைய புகழையும், பெருமையையும் அடுத்து வரும் தலைமுறைக்கு எடுத்துச் சொல்வதோடு, இனம், மொழி, மாநிலம் காக்க எந்நாளும் உழைப்பதுதான் தலைவர் கருணாநிதிக்கு நாம் காட்டக்கூடிய உண்மையான நன்றி.
என்றும் இறவாத தாய்க் கலைஞர் வாழ்க! வாழ்க! என வாழ்த்தி, எ.வ. வேலுவை மனதாரப் பாராட்டி, இந்த நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பு வைத்தது போல ரஜினிகாந்த் வருகை தந்து மனந்திறந்து என்னை ஊக்கப்படுத்தக்கூடிய வகையில், என்னைவிட ஒரு வயது கூடதான், அதனால் அறிவுரையும் சொன்னார். அவர் சொன்ன அத்தனையையும் நான் புரிந்துகொண்டேன். பயப்பட வேண்டாம். எதிலும் நான் தவறிவிடமாட்டேன். எல்லாவற்றிலும் உஷாராக இருப்பேன் என்ற அந்த உறுதியை அவருக்கும் தெரிவித்து, அவருக்கு என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். >>“விமர்சனம் செய்யுங்கள்... ஆனால், மனதை நோகடிக்காதீர்கள்!” - ரஜினிகாந்த் பேச்சு
இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக அமைத்து நம்மையெல்லாம் பெருமைப்படுத்தி இருக்கக்கூடிய எ.வ.வேலுவுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி, நன்றி, நன்றி என்று கூறி விடைபெறுகிறேன்! வணக்கம்!” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். வீடியோ லிங்க்...
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago