“திமுக அரசை பின்வாங்க வைத்தது அதிமுக உண்ணாவிரதம்” - முன்னாள் அமைச்சர் பெருமிதம்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: “மதுரை அதிமுக உண்ணாவிரதம், திமுக அரசை பின்வாங்க வைத்துள்ளது’’ என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை கல்வித் துறையுடன் இணைத்து முடக்க நினைக்கும் திமுக அரசை கண்டித்து மதுரை, திண்டுக்கல் தேனி மாவட்ட அதிமுக சார்பில் மதுரை அருகே செக்கானூரணி பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘‘அதிமுக ஆட்சியில் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வந்தன. இந்த பள்ளிகளை முடக்கும் வகையில், திமுக அரசு, பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கும் முயற்சிகளை எடுத்தது. அதை எதிர்த்து பொதுச்செயலாளர் கே.பழனிசாமி ஒரு அறிக்கையை வெளியிட்டு அதிமுக உண்ணாவிரதத்தை அறிவித்தார். அதிமுகவின் இந்த அறிவிப்பால் தற்போது திமுக அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை முடக்க நினைத்த நடவடிக்கையில் பின்வாங்கியுள்ளது’’ என்றார்.

சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், ‘‘உண்ணாவிரப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. வழக்கறிஞர்கள் குழு மூலம் சட்டப்போராட்டம் நடத்தி அனுமதி பெறப்பட்டது. இது சட்டவிரோத போராட்டம் அல்ல, சட்ட உரிமையை காக்கும் போராட்டமாகும். திமுக அரசின் காவல்துறை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அடக்கு முறையை போல் உள்ளது. இந்த உண்ணாவிரத்தை திசை திருப்ப, அரசு உப்பு சப்பு இல்லாமல் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் விவகாரம் தொடர்பாக ஒரு மறுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. முதலில் கள்ளர் சீரமைப்பு பள்ளி விடுதிகள், அதன் கல்வி நிறுவனங்கள், அதனை தொடர்ந்து தியாகிகளின் வரலாறுகளை மறைக்க திமுக அரசு நினைக்கிறது’’ என்றார்.

நத்தம் ஆர்.விஸ்வநாதன் பேசுகையில், ‘‘மக்கள் நலத்திட்டங்களுக்கு மூடு விழா நடத்திய திமுக அரசு, இன்று அரசு பள்ளிகளையும் மூட நினைக்கிறது. அதற்கான முதல் நடவடிக்கையாக தான் அவர்கள், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை முடக்க நினைப்பது. இந்த பள்ளிகளை திமுக அரசு முடக்க, மூட நினைப்பது, தென் மாவட்ட மக்களுடைய உணர்வுடன் சம்பந்தப்பட்டது. மக்கள் மீது, குறிப்பாக முக்குலத்தோர் மீது அறிவிக்கப்படாத போரை திமுக அரசு தொடுத்துள்ளது. அதற்கான பின்விளைவை வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக சந்திக்கும்’’ என்றார்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசுகையில், ‘‘மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சீர்மரபினர் சமுதாயமான பிரமலைக்கள்ளர் சமுதாய மக்களுக்கு கல்வி வழங்குவதற்காகவே கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் தொடங்கப்பட்டது. இந்த பள்ளிகளை சிறப்பாக நிர்வாக செய்யாமல் முடியாமல் திறனற்ற அரசாக திமுக அரசு உள்ளது. கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மறுத்துள்ளார். அவர் இதுவரை இல்லை என்றுதான் அவர்கள் கூறியுள்ளனர். இனி எடுக்கப்படலாம் என்று மறைமுகமாக கூறியுள்ளார்’’ என்றார்.

அமைப்பு செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா பேசுகையில், ‘‘வெற்று அறிக்கைகள் மூலம் அதிமுகவின் போராட்டங்களை திமுக ஒடுக்க நினைக்கிறது. சமுதாய அமைப்புகள், பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தந்து திமுகவின் சூழ்ச்சியை முறியடித்துள்ளனர். கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் படித்தவர்கள் இன்று சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் உள்ளனர்.

கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மூடப்படாது என்று வெளியிடப்பட்ட பிற்படுத்தப்பட்ட நலத்துறை வெளியிடப்பட்ட அறிக்கையில் யார் கையெழுத்தும் இல்லை. இந்த மொட்டை அறிக்கையை எப்படி மக்கள் நம்புவார்கள். அனைத்து சமுதாய விழிப்பு நிலை மக்களின் நியாயமான கோரிக்கைகளை எதிரொலிக்கும் ஒரே இயக்கம் அதிமுகவாக உள்ளது’’ என்றார்.

தேனி மாவட்ட செயலாளர்கள் முன்னாள் எம்எல்ஏ எஸ்.டி.கே.ஜக்கையன், முருக்கோட்டை ராமர், அதிமுக தகவல் தொழில்நுட்ப செயலாளர் ராஜ்சத்தியன், மதுரை கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ரமேஷ், அமைப்புச் செயலாளர் மகேந்திரன், எம்எல்ஏ, பெரிய புள்ளான், முன்னாள் எம்எல்ஏ,க்கள் அண்ணாதுரை, மாணிக்கம், தவசி, கருப்பையா, டாக்டர் சரவணன், தமிழரசன், எஸ்.எஸ் சரவணன், நீதிபதி மற்றும் அனைத்து சமுதாய தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE