ரூ.86 கோடியில் கட்டப்பட்ட எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டில் மண் அரிப்பா? - பொதுப் பணித் துறை விளக்கம்

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏனாதிமங்கலம் கிராமத்துக்கும், கப்பூர் கிராமத்துக்கும் இடையே தென்பெண்ணை ஆற்றில் 1949-1950-ல் எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு கட்டப்பட்டது.

இந்த அணைக்கட்டின் உள்ள வலது புற பிரதான கால்வாய்களான எரளூர், ரெட்டி என இரு வாய்க்கால்கள் மூலம் 12 ஏரிகளுக்கும், இடதுபுற பிரதான கால்வாய்களான ஆழங்கால், மரகதபுரம் மற்றும் கண்டம்பாக்கம் என மூன்று வாய்க்கால்கள் மூலம் 14 ஏரிகளுக்கும் நீர் வரத்து உள்ளது. இதனால் 13,100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 2021-ம் ஆண்டு பெய்த கனமழையின் காரணமாகவும், ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாகவும், அணைக்கட்டு சேதமடைந்தது. இதனால் இவ்வணைக்கட்டின் மூலம் பாசன வசதி பெற்று வந்த விவசாயிகளுக்கு பாசன வசதி குறைந்தது.

இதையடுத்து, சேதமடைந்த அணைக்கட்டினை சீரமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து, 2023-2024-ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில், சேதமடைந்த அணைக்கட்டை ரூ.86.25 கோடி மதிப்பீட்டில் மறுகட்டுமானம் செய்ய நீர்வளத்துறை அரசாணை வழங்கியது. புதிய அணை கட்டும் பணியானது கடந்த 24.11.2023-ல் தொடங்கியது. இந்த அணைக்கட்டின் இருபுறமும் தலா 5 மணற்போக்கிகள் வீதம் மொத்தம் 10 மணற்போக்கிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விநாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீரை வெளியேற்றலாம்.

இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் 24-ம் தேதி இந்த அணையை பார்வையிட்ட விவசாய சங்க நிர்வாகிகள், “தடுப்பணையின் வடக்கு, தெற்கு கரையோரம் சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு பாசன வாய்க்கால் அமைத்தால் தெளி, கப்பூர், லட்சுமிபுரம், ஏனாதிமங்கலம், பேரங்கியூர், இருவேல்பட்டு, திருவெண்ணெய்நல்லூர் ஆகிய கிராமங்கள் பாசனவசதி பெறும்” என்றனர்.

இதனிடையே, இந்த அணைக்கட்டு பணிகள் முடிவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராக இருந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழையால் தென்பெண்ணையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி, எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டில் தேங்கியது. அணைக்கட்டின் வலதுபுறமாக உள்ள ரெட்டி வாய்க்கால், ஏரளூர் வாய்க்கால் கரைகள் ஏரி மண்ணால் சமப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால், இந்த மழைக்கே கரைகளில் மண் அரிப்பு ஏற்பட்டு, அணையே உடைந்து விடும் நிலையில் உள்ளதை கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

அணைக்கட்டில் இருந்து வலது புறமாக உள்ள ஷட்டர் வழியாக தண்ணீர் திறந்தால் மண்ணால் கட்டப்பட்ட கரைகளில் அரிப்பு ஏற்பட்டு அவை உடைந்து கரையோரமாக உள்ள ஏனாதிமங்கலம், செம்மார். எரளூர் உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்து விடும். அதன் மூலம் விவசாயம் பாதிக்கப்படுவதுடன் உயிரிழப்புகளும் ஏற்படும். எனவே, வலதுபுறமாக உள்ள 2 பிரதான கால்வாய்களையும் கற்களாலும், கான்கிரீட்டாலும் அமைக்க வேண்டும் எனவும், அதன் பிறகே கால்வாய்களில் தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் ஷோபனா, உதவி செயற்பொறியாளர் ஐயப்பன் ஆகியோர் நம்மிடம் கூறுகையில், “புதிய அணைக்கட்டு மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட வெள்ளத்தடுப்பு கரைகள் ஸ்திரத்தன்மையுடன் உள்ளது. வாய்க்காலில் ஏற்பட்டுள்ள கரை அரிப்புகள் கடந்த 22-ம் தேதியே சரி செய்யப்பட்டு தண்ணீர் செல்வதற்கு தயார் நிலையில் உள்ளது. எதிர்வரும் பருவமழைக் காலங்களில் கிடைக்கப்பெறும் ஆற்று நீரை கடலில் கலக்காமல் ஆழங்கால் வாய்க்காலில் 21 கிமீ தூரத்திற்கும், மரகதபுரம் வாய்க்காலில் 2 1/2 கிமீ தூரத்திற்கும், கண்டம்பாக்கம் வாய்க்காலில் 10 கிமீ தூரத்திற்கும், ரெட்டி வாய்க்காலில் 22 கிமீ தூரத்திற்கும், எரளூர் வாய்க்காலில் 10 கிமீ தூரத்திற்கும் பாசன வசதிபெற உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE