“திமுக ஐடி விங்கில் வேலை செய்யக் கூடாது!” - திருச்சி எஸ்.பி வருண்குமாருக்கு சீமான் பதில்

By செய்திப்பிரிவு

திருவாரூர்: “ஏற்கெனவே என் மீது 138 வழக்குகள் உள்ளன. அதை அதிகப்படுத்தி 200 ஆக்கிவிடலாம் என்று திருச்சி எஸ்.பி வருண்குமார் நினைக்கிறார். டபுள் செஞ்சுரி அடித்தார் சீமான் என்று வரலாற்றில் வரவேண்டும் அல்லவா? அவர் ஐபிஎஸ் அதிகாரியாக இயங்க வேண்டும். திமுகவின் ஐடி விங்கில் வேலை செய்யக் கூடாது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

திருவாரூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியுடன் விஜய்யின் தவெக கட்சி கூட்டணிக்கு வந்தால் என்ற கேள்விக்கு, “ஊடகங்கள் முன்னால் நான் சிக்கிக் கொள்கிறேன். தினமும் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள். செப்.22-ம் தேதி விஜய் மாநாடு நடத்தி கட்சியை அறிவிக்கிறார். அவர் செய்தியாளர்களைச் சந்திக்கும்போது இந்தக் கேள்வியை அவரிடம் கேளுங்கள், ஓயாமல் என்னை தொந்தரவு செய்யக் கூடாது,” என்றார்.

கிருஷ்ணகிரி சிவராமன் தற்கொலை குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை சந்தேகம் எழுப்பியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “அவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருப்பார் என்பது குறித்து எங்களுக்கு தெரியவில்லை. ஆனால், உளவியல் ரீதியாக வருந்தி, ஒரு மாதத்துக்கு முன்பாக எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். நான் இந்த உலகத்தை விட்டுச் செல்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று அதில் எழுதியிருந்தார். எதற்காக அவர் அப்படி எழுதியிருந்தார் என்று எனக்கு தெரியவில்லை.

நான் உடனே கட்சியினருக்கு அந்தச் செய்தியை அனுப்பி, என்னவென்று விசாரிக்குமாறு கூறினேன். அப்போது எனக்குத் தெரியவில்லை, அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பார் என்று. நன்கு படித்தவர், வழக்கறிஞர். நல்ல திறமையாக இயங்கக்கூடியவர். அவர் இறந்தது மட்டுமின்றி, அவருடைய தந்தையும் விபத்துக்குள்ளாகி இறந்துவிட்டார். இரண்டு செயல்களுமே நடந்திருக்கக் கூடாது. அதற்காக நான் வருந்துகிறேன்,” என்றார்.

திருச்சி எஸ்.பி. வருண்குமார் வழக்கு தொடுப்பதாக கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “ஏற்கெனவே என் மீது 138 வழக்குகள் உள்ளன. அதை அதிகப்படுத்தி 200 ஆக்கிவிடலாம் என்று நினைக்கிறார். டபுள் செஞ்சுரி அடித்தார் சீமான் என்று வரலாற்றில் வரவேண்டும் அல்லவா. அவர் ஐபிஎஸ் அதிகாரியாக இயங்க வேண்டும். திமுகவின் ஐடி விங்கில் வேலை செய்யக் கூடாது.

நான் பார்க்காத வழக்கா? அவர் அதிகாரத்தின் ஒரு புள்ளி. நான் அதிகாரத்தையே எதிர்த்து சண்டை செய்து கொண்டிருக்கிறேன். மத்திய அரசு, மாநில அரசை எதிர்த்து சண்டை செய்து கொண்டிருக்கிறேன். அகில உலகத்தை எதிர்த்து சண்டை செய்தவரின் மகன் நான். நீ எம்மாத்திரம். ஃஎப்ஐஆர் போடு, என்னத்தையாவது போடு, என் வீட்டில் ஐந்தாறு குப்பைக் கூடைகள் இருக்கிறது, நான் கிழித்துப் போட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்பேன்,” என்று சீமான் கூறினார்.

திருச்சி எஸ்பி வருண்குமார் கூறியது என்ன? - மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது திருச்சி போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இதன் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் திருச்சி எஸ்பி-யான வருண்குமாரை விமர்சனம் செய்தனர்.

இது போன்ற விமர்சனங்கள் குறித்து சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி-யான வருண்குமார் எச்சரித்து இருந்தார். எனினும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலர் எஸ்பி-யை மட்டுமல்லாது அவரது குடும்பத்தினர் மீதும் விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், “ஒரு சராசரி குடும்ப நபராக எங்கள் மூன்று குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மீதான அக்கறைக்காக இந்த எக்ஸ் இணைய உரையாடல்களிலிருந்து தற்காலிகமாக நானும், எனது மனைவியும் விலக முடிவு செய்துள்ளோம். எங்களுக்கு எதிராக அவதூறு பரப்பிய அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் 2 பொறுப்பாளர்கள் மீது ரூ.2 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன். எந்தவித சமரசமும் இன்றி இந்த சட்ட நடவடிக்கையை மேற்கொள்வேன்” என்று திருச்சி எஸ்பி வருண்குமார் கூறியுள்ளார். | முழுமையாக வாசிக்க > ரூ.2 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு: சீமான் தரப்புக்கு எதிராக திருச்சி எஸ்.பி. வருண்குமார் அறிவிப்பு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE