மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம்: தமிழ்நாடு வனத்துறை அலுவலக பணியாளர்கள் கோரிக்கை

By எஸ்.கல்யாணசுந்தரம்

திருச்சி: மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் படி ஆகியவற்றை வழங்க வேண்டும் என வனத்துறை அலுவலக பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு வனத்துறை அலுவலகப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில சிறப்புக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் பார்த்திபன் தலைமை வகித்தார். சங்கப் பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநிலச் செயலாளர் சந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் பெரியசாமி, மாவட்டத் தலைவர் பால்பாண்டி, தமிழ்நாடு வனத்துறை அலுவலகப் பணியாளர் சங்க முன்னாள் அமைப்புச் செயலாளர் முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் வருமாறு; மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் படிகளை வனத்துறை அலுவலகப் பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். அலுவலகப் பணியாளர்கள் குடியிருப்பை பராமரிப்பு செய்து, புதிய குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும்.

இ-அலுவலகம் முறையை நடைமுறைப்படுத்த அனைத்து அலுவலக பணியாளர்களுக்கும் முறையான பயிற்சியளித்து, கணினி வழங்க வேண்டும். மின்னஞ்சல் மூலம் வழங்கப்படும் பணி மாறுதலில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE