திருவாரூரில் பிரசித்தி பெற்ற பரவை நாச்சியார் கோயிலில் ஐயப்பன் சிலை திருட்டு

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

திருவாரூர்: திருவாரூரில், பிரசித்தி பெற்ற பரவை நாச்சியார் கோயிலில் ஒன்றரை அடி உயரமுள்ள வெண்கலத்தாலான ஐயப்பன் சிலை திருடு போயிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூரில் புகழ்பெற்ற, தியாகராஜர் கோயில் அருகே, ஸ்ரீ எம்பிராட்டி பரவை நாச்சியார் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் ஐயப்பனுக்கு தனி சன்னிதி உள்ளது. இந்த சன்னிதியில், சுமார் ஒன்றரை அடி உயரத்தில் வெண்கலத்தான் ஆன ஐயப்பன் சிலை ஒன்று இருந்தது. இதற்கு தினமும் பூஜைகள் செய்யப்படுவது வழக்கம்.

குறிப்பாக, கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் இங்குள்ள ஐயப்பன் சன்னிதியில் தான் மாலை அணிவது, சபரிமலை க்கு செல்ல இருமுடி கட்டுவது போன்றவற்றைச் செய்வது வழக்கம். இந்த நிலையில், நேற்று இரவு கோயில் அர்ச்சகர், பூஜைக்கு பின்னர் வழக்கம்போல் கோயிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.

இந்த நிலையில், இன்று காலை கோயிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைந்து கிடந்துள்ளது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் இதைப் பார்த்துவிட்டு கோயில் நிர்வாகத்தாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக கோயிலுக்கு வந்த அர்ச்சகர், உள்ளே சென்று பார்த்த பொழுது பூட்டு உடைக்கப்பட்டு ஐயப்பன் சிலை திருடுபோயிருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ. 1 லட்சம் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

தகவலறிந்து அங்கு வந்த திருவாரூர் நகர போலீஸார் அருகில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து, ஐயப்பன் சிலையை திருடிய நபரை தேடி வருகின்றனர். மேலும், கைரேகை நிபுணர்கள் உதவியுடனும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரசித்திபெற்ற பரவை நாச்சியார் கோயிலில் ஐயப்பன் சிலை திருடு போயிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE