புதுவை பி, சி பிரிவு பணிகளில் 3 ஆண்டுகள் வயது வரம்பு உயர்வு வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: புதுவையில் அனைத்து பி மற்றும் சி பிரிவு பணிகளுக்கும் இந்த ஒருமுறை மட்டுமாவது மூன்று ஆண்டுகள் வயதுவரம்பு உயர்வு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். வயதுவரம்பு உயர்வை வென்றெடுக்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், “புதுவையில் ஆசிரியர்கள், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தேர்வு செய்வதற்கான அறிவிக்கைகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக 37 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த ஆள்தேர்வில் அனைத்துப் பிரிவினருக்கும் வயதுவரம்பை உயர்த்த மத்திய அரசு மறுத்து விட்டதால், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படும் ஆபத்து உருவாகியுள்ளது.

புதுவை அரசின் சார்பில் பி மற்றும் சி பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 15 வகையான பணிகளுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு அறிவிக்கைகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. அனைத்துப் பணியிடங்களுக்கும் அதிகபட்ச வயதாக 30 ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயதுவரம்பில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், புதுவை மாநிலத்தில் ஆள்தேர்வு நடத்தப்படும் வரலாற்றை வைத்துப் பார்க்கும் போது அரசால் அறிவிக்கப் பட்டுள்ள வயது வரம்பு தளர்வு போதுமானதல்ல. இது லட்சக்கணக்கான இளைஞர்களை பாதிக்கும்.

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருப்பதைப் போன்று புதுவையில் பணியாளர் தேர்வாணையம் இல்லை. அதனால், அம்மாநிலத்தில் தொடர்ச்சியாக ஆள்தேர்வு நடைபெறுவதில்லை. பல நேரங்களில் ஒரு பணிக்கு ஆள்தேர்வு செய்ய 25, 30 ஆண்டுகள் கூட ஆவதுண்டு. எடுத்துக்காட்டாக பொதுப்பணித் துறையில் சிவில் பிரிவு இளநிலை பொறியாளர் பணிக்கு 37 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் ஆள்தேர்வு நடைபெறுகிறது.

ஒட்டுமொத்தமாக அறிவிக்கப்பட்டுள்ள 15 வகை பணிகளில் 7 வகையான பணிகளுக்கு இப்போது தான் முதல் முறையாக நேரடியாக ஆள்தேர்வு நடைபெறவுள்ளது. இவ்வளவு அதிக கால இடைவெளியில் ஆள்தேர்வு நடைபெறும் போது, அதற்கேற்ற வகையில் வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும். ஆனால், அதை செய்ய மத்திய அரசும், புதுவை மாநில அரசும் தவறிவிட்டன.

ஒரு மாநில அரசு பணிக்கு ஆள்தேர்வு நடைபெறும் போது, அப்பணிக்கு இதற்கு முன் எப்போது ஆள்தேர்வு நடத்தப்பட்டதோ, அப்போது முதல் அந்தப் பணிக்கான கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை ஆகும். எடுத்துக்காட்டாக பொதுப்பணித்துறை சிவில் பிரிவு இளநிலை பொறியாளர் பணிக்கு 37 ஆண்டுகளுக்குப் பிறகு ஆள்தேர்வு நடைபெறும் நிலையில், கடந்த 37 ஆண்டுகளில் பொறியியல் படிப்பு படித்த அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். அதற்கு வசதியாக அந்தப் பணிக்கு 57 அல்லது 58 வயதை வரம்பாக நிர்ணயிக்க வேண்டும். முதல்முறையாக நேரடித் தேர்வு நடத்தப்படும் பணிகளுக்கு வயது வரம்பே கூடாது என்பது தான் இயற்கை நீதியாகும்.

ஆனால், புதுவை பட்டதாரி இளைஞர்களின் கோரிக்கை என்பது வயது வரம்பு மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்பது தான். அதுவும் கூட கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆள்தேர்வு எதுவும் நடைபெறாததால், பல இளைஞர்கள் வயது வரம்பை கடந்து விட்டதால், அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

இது நியாயமான கோரிக்கை தான். அதனால், இதை புதுவை அரசு ஏற்றுக் கொண்டு, இந்த ஒரே ஒரு முறை மட்டும் வயது வரம்பை அதிகரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. ஆனால், மத்திய உள்துறை மற்றும் பணியாளர் நலன் அமைச்சகங்கள் இந்தக் கோரிகையை ஏற்க மறுத்து விட்டன. இது புதுவை மாநில இளைஞர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அநீதி.

மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தில் உள்ள அந்தமான் & நிகோபார் தீவுகளில் அரசு பணிகளுக்கான ஆள்தேர்வில், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஆள்தேர்வு நடைபெறாததைக் காரணம் காட்டி இரு ஆண்டுகள் வயது வரம்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. தொடர்வண்டித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் இச்சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சலுகை புதுவை இளைஞர்களுக்கு மட்டும் மறுக்கப் படுவது ஏன்? என்பது தான் அம்மாநில மக்களின் வினா. அதற்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்.

புதுவையில் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி வாடிக் கொண்டிருக்கின்றனர். குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆள்தேர்வு நடைபெற்றிருந்தால் அரசை குறைகூற முடியாது. மாறாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆள்தேர்வு நடத்தப்படாதது இளைஞர்களின் தவறு அல்ல, அரசின் தவறு தான். சில பணிகளுக்கு தகுதி பெற்ற இளைஞர்களுக்கு அவர்களின் வாழ்நாளில் ஒருமுறை கூட அரசு பணிக்கு விண்ணப்பிக்க வாய்ப்புக் கிடைப்பதில்லை.

அத்தகையவர்களுக்கு வயது வரம்பு விலக்கு மறுக்கப்பட்டால், பாதிக்கப்படுபவர்கள் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லாத நிலை ஏற்படும். அதுமட்டுமின்றி, மாநில அந்தஸ்து கிடைக்காததால் தான் இத்தகைய அநீதிகள் இழைக்கப்படுகின்றன என்று இளைஞர்கள் நினைக்கும் போது, மாநில அந்தஸ்து கோரியும் போராட்டங்கள் வெடிக்கக்கூடும்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, புதுவையில் அனைத்து பி மற்றும் சி பிரிவு பணிகளுக்கும் இந்த ஒருமுறை மட்டுமாவது மூன்று ஆண்டுகள் வயதுவரம்பு உயர்வு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். இதற்காக அதிகாரிகள் குழு ஒன்றை டெல்லி அனுப்பி மத்திய அரசுடன் பேச்சு நடத்தி வயதுவரம்பு உயர்வை வென்றெடுக்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்