பயன்பாட்டுக்கு வரும் முன்பே ஆரியப்பாளையம் மேம்பாலம் இணைப்புச் சாலையில் விரிசல்!

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: பயன்பாட்டுக்கு வரும் முன்னரே ஆரியப்பாளையம் மேம்பாலம் - சாலைக்கு இடையிலான இணைப்புச் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சாலையின் தரத்தை உடன் ஆராய அரசு உடன் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதுவை - விழுப்புரத்தின் முக்கிய வழித்தடமாக ஆரியப்பாளையம் சங்கராபரணி ஆற்றுப்பாலம் உள்ளது. சங்கராபரணியில் வெள்ளம் வந்ததால் சில நாட்கள் போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பிவிடும் சூழல் உருவானது. அதனால் புதிய பாலத்தை உயரமாக கட்ட முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.64 கோடியில் மேம்பாலத்துடன் சாலை அகலப்படுத்தும் பணி 2022-ம் ஆண்டு தொடங்கியது.

சங்கராபரணி ஆற்றுப்பாலம் 360 மீட்டரில் அமைக்கப்பட்டது. பணிகள் நிறைவுபெற்று புதிய பாலத்தின் இருபகுதியிலும் நடைபாதை வசதி, வண்ணம் தீட்டும் பணி, எல்இடி விளக்கு அமைக்கும் பணிகள் முடிந்துள்ளது. புதிய பாலம் திறப்பு விழாவுக்கு தயாரான நிலையில் சோதனை ஓட்டமாக பாலத்தின் மீது வாகனங்கள் செல்ல இரண்டு நாட்கள் முன்பு அனுமதிக்கப்பட்டது.

இதில், பாலத்திதுக்கும் சாலைக்கும் இடையில் அமைக்கப்பட்ட இணைப்புச் சாலை திறப்பு விழாவுக்கு முன்பாகவே விரிசல் விட துவங்கிவிட்டது. பாலம் கட்டி முடித்து இணைப்பு சாலை பகுதியில் சோதனை ஓட்டத்தின்போதே விரிசல் ஏற்பட தொடங்கியுள்ளதால் தரத்தின் நிலை பற்றி மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், "விழுப்புரம் - நாகை இடையிலான நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது. இச்சாலையில் குறிப்பாக புதுச்சேரி - விழுப்புரம் சாலையின் இறுதிக் கட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதில் குறிப்பாக, விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம், கோலியனூர் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலங்கள் செல்லும் பகுதியில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சாலை பணிகளை ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், பள்ளம் தோண்டி பேட்ச் ஒர்க் போல் சாலையை சீரமைத்தது. பயன்பாட்டுக்கு வராத நிலையில் சாலையில் ஏற்பட்ட விரிசலால் மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய தரப்பிலும் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். அதேபோல் தற்போது புதுச்சேரி அரசு நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியிலும் திறப்பு விழாவுக்கு முன்னரே சோதனை ஓட்டத்தின்போதே சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு இவ்விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு சாலையின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும். திறப்பு விழாவுக்கு முன்னரே பேட்ச் ஒர்க் செய்யும் நிலை வந்தது ஏன் என விசாரிக்க வேண்டும்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE