கிருஷ்ணகிரி சிவராமன், அவரது தந்தை இறந்தது எப்படி? - காவல் துறையின் விளக்கமும், எச்சரிக்கையும்

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சிவராமன், அவரது தந்தை இறப்பு குறித்து தவறான தகவல்கள் பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரித்துள்ளது.

கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் கைதான சிவராமன், எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை 5.30 மணி அளவில் உயிரிழந்தார். இதனிடையே, சிவராமனின் தந்தை அசோக்குமார் (61) வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

சிவராமன், அவரது தந்தை அசோக்குமார் ஆகியோரின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கருத்துத் தெரிவித்திருந்தனர். இது குறித்து சமூ கவலைதளங்களில் வதந்திகளும் பரவியது. இந்த நிலையில், காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிக்கையில், ‘கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில், கடந்த 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை பள்ளியின் அனுமதியுடன் என்சிசி முகாம் நடத்தப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாவட்ட தலைவராக இருந்த சிவராமன் என்பவர், தான் என்சிசி பயிற்சிக்கு முறையான அனுமதி பெற்றதாக கூறி முகாம் நடத்தி தருவதாக 2 பெண்கள் உட்பட 5 பேரை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். இந்த முகாமில் பங்கேற்ற 17 மாணவிகள் உட்பட 41 மாணவர்கள் 4 நாட்கள், அந்த பள்ளியிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அப்போது சில மாணவிகளிடம் சிவராமன், பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக கடந்த 17-ம் தேதி பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், மாவட்ட குழந்தை நல அலுவலர் ஆகியோர் பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

இது குறித்து போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய மற்றும் சம்பவத்தை காவல் துறைக்கு தெரிவிக்காமல் மறைத்த பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் இருவர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு, கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான காவேரிப்பட்டணம் காந்தி நகர் காலனியைச் சேர்ந்த சிவா (எ) சிவராமன் (35) என்பவரை கடந்த 19-ம் தேதி, கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் அருகே பொன்மலை கோயிலில் கைது செய்ய முயற்சித்த போது, போலீஸாரிடம் இருந்து தப்பியோட முயற்சி செய்தார். அப்போது அவருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, அன்றைய தினம் அதிகாலை 2 மணியளவில், சிவராமன் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து காலை 3 மணியளவில், பர்கூர் போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். இந்த விசாரணையின் போது, சிவராமன் கைது செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு எலி மருந்து உட்கொண்டதாக ஒப்புக்கொண்டார்.

அசோக்குமார் இறப்பு குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள சிசிடிடவி காட்சி

அவர் எலி மருந்தை உட்கொண்டதை மருத்துவர்கள், அவரது மெடிக்கல் அறிக்கையில் குறிப்பட்டுள்ளனர். கடந்த 21-ம் தேதி மதியம் 12.15 மணிக்கு, மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவக் கல்லூரிக்கு சிவராமன் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு 2 நாட்கள் டயாலிஸ்சிஸ் சிகிச்சை வழங்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை சுமார் 5.30 மணியளவில் சிவராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இவர் குடும்பப் பிரச்சினை காரணமாக கடந்த ஜூலை மாதம் 9-ம் தேதி எலி மருந்து சாப்பிட்டு, கிருஷ்ணகிரியில் உள்ள டிசிஆர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 17-ம் தேதி வீடு திரும்பி உள்ளார்.

மேலும், நேற்று (ஆக.22) இரவு 10.15 மணியளவில், சிவராமனின் தந்தை அசோக்குமார்(61) என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் திம்மாபுரத்தில் இருந்து காவேரிப்பட்டணம் நோக்கி சென்றபோது, தேர்பட்டி என்னும் இடத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலை மற்றும் தோல்பட்டையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சிவராமனின் தாயார் பத்மா கொடுத்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அசோக்குமாரின் உடல் உடற்கூறாய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அசோக்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது. இந்நிலையில் சிவராமன், அவரது தந்தை அசோக்குமார் இறப்பு குறித்து ஏதேனும் தவறான செய்திகள் பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE