தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி, பாடல் அறிமுகம் செய்தார் விஜய்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடலை கட்சித் தலைவர் விஜய் அறிமுகம் செய்தார். தமிழகத்துக்காகவும், தமிழக மக்களின் உயர்வுக்காகவும் நாம் அனைவரும் சேர்ந்து உழைப்போம் என்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி, பாடல் அறிமுக விழா, கட்சித் தலைவர் விஜய் அறிவித்தபடி, சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதனால், கட்சி அலுவலகம் விழாக்கோலம் பூண்டிருந்தது. காலை முதலே நிர்வாகிகள் வந்தபடி இருந்தனர்.

காலை 9.15 மணி அளவில் விழா அரங்குக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வந்தார். தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் நிர்வாகிகளுக்கு வணக்கம் தெரிவித்த விஜய், அவர்களுடன் சிறிது நேரம் அமர்ந்தார்.

பின்னர், கட்சியினரின் ஆரவார கோஷத்துக்கு இடையே விஜய் மேடையேறினார். அவரது தலைமையில் நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். விடுதலை வீரர்களின் தியாகத்தை போற்றுதல், மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றுதல், மதச்சார்பின்மை, சமூகநீதியை பின்பற்றுதல், வேற்றுமையை களைதல் உள்ளிட்ட கருத்துகளை முன்வைத்து நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை விஜய் அறிமுகம் செய்தார். கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள கொடிக் கம்பத்திலும் கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து, கொடி பாடலும் திரையிடப்பட்டது. அப்போது, விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த் ஆகியோர் மிகவும் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

விழாவில், விஜய் பேசியதாவது: நம் அனைவருக்கும் இது மிகவும் சந்தோஷமான நாள்.நான் எனது அரசியல் பயணத்தை தொடங்கி, தொடக்க புள்ளியாக கட்சியின் பெயரை கடந்த பிப்ரவரியில் அறிவித்தேன். அப்போதிருந்து நமது முதல் மாநில மாநாட்டுக்காக நீங்கள் அனைவரும் காத்திருந்தீர்கள் என்று எனக்கு நன்றாகவே தெரிந்தது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மாநாடு எப்போது என்பதை விரைவில் அறிவிக்க உள்ளேன்.

அதற்கு முன்பு நாம் எல்லாரும் கொண்டாடி மகிழ்வதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்துள்ளேன். என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் மற்றும் தோழர்களாகிய உங்கள் முன்னால் கொடியை அறிமுகம் செய்வதை மிகவும் பெருமையாக கருதுகிறேன். இதுவரை நமக்காக உழைத்தோம். இனிவரும் காலத்தில் கட்சி ரீதியாக நம்மை தயார்படுத்தி, தமிழகத்துக்காகவும், தமிழக மக்களின் உயர்வுக்காகவும் நாம் அனைவரும் சேர்ந்து உழைப்போம்.

புயலுக்கு பின்னே அமைதி, ஆர்ப்பரிப்பு, ஆரவாரம் இருப்பதுபோல, நம் கொடியின் பின்னணியிலும் ஒரு வரலாற்று குறிப்பு இருக்கிறது. முதல் மாநில மாநாட்டில் நமது கொள்கைகள், நம் செயல் திட்டங்கள் ஆகியவற்றை அறிவிக்கும்போது, இந்த கொடிக்கான விளக்கத்தையும் சொல்கிறேன்.

இதை நான் கட்சிக் கொடியாக பார்க்கவில்லை. தமிழக வருங்கால தலைமுறையின் வெற்றிக்கான கொடியாகவே பார்க்கிறேன். நான் சொல்லாமலேயே, இக்கொடியை உங்கள் உள்ளத்திலும், உங்கள் இல்லத்திலும் ஏற்றுவீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும், அதற்கான முறையான அனுமதியை பெற்று, விதிகளை கடைபிடித்து அனைவரிடமும் தோழமை பாராட்டி, சந்தோஷமாக, பெருமிதத்தோடு கொடியை ஏற்றி கொண்டாடுவோம். தன்னம்பிக்கையோடு இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். இவ்வாறு விஜய் பேசினார்.

முன்னதாக, கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார். பொருளாளர் வெங்கட்ராமன், தலைமை நிலைய செயலாளர் ராஜசேகரன், கொள்கை பரப்பு இணை செயலாளர் தாஹிரா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கொடி அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தவெக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

‘தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பொறக்குது’: விஜய் அறிமுகம் செய்துள்ள தமிழக வெற்றிக் கழக கொடியின் மேலும், கீழும் அடர் சிவப்பு நிறத்தில் உள்ளது. நடுவில் மஞ்சள் நிற பின்னணியில் வாகை மலரை சுற்றி பச்சை, நீல நிற நட்சத்திரங்கள் மிளிர, அதன் இருபுறமும் கம்பீரமாக கால்களை உயர்த்தியபடி இரு யானைகள் நிற்பதுபோல கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாடலாசிரியர் விவேக் வரிகளில், தமன் இசையில், ‘தமிழன்கொடி பறக்குது.. தலைவன் யுகம் பொறக்குது’ என தொடங்கும் பாடலும் வெளியிடப்பட்டது. முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்ஜிஆருக்கு நடுவே விஜய் கையசைப்பது போன்ற கிராஃபிக்ஸ் காட்சிகள் இப்பாடலில் இடம்பெற்றுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE