ஆலந்தூர், சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு 10 நிமிடத்துக்கு ஓர் இணைப்பு வாகனம்: மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆலந்தூர், சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 10 நிமிடத்துக்கு ஒர் இணைப்பு வாகனம் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் தினமும் 2.70 லட்சம் முதல் 3 லட்சம் பேர் வரை பயணம் செய்கின்றனர். பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில்,

பல்வேறு நடவடிக்கைகளை மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, குடியிருப்புகள், ஐ.டி.நிறுவனங்கள், அலுவலகங்களுக்குஇணைப்பு வாகன வசதியை விரிவுபடுத்தி வருகிறது.

தற்போது முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து சிற்றுந்துகள், வேன்கள், கால்டாக்சிகள் போதிய அளவில் இல்லை. இதனால், வெகு நேரம் காத்திருக்க நேரிடுகிறது என பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். எனவே, மக்கள் அதிகம் வந்து செல்லும் மெட்ரோ ரயில் நிலையங்களில், கூடுதல் இணைப்பு வாகன வசதியை விரிவுபடுத்த மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. அதற்கேற்ப, அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, பெண் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

பயணிகள் அதிகம் வந்துசெல்லும் சென்ட்ரல், ஆலந்தூர் போன்ற முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 10நிமிடத்துக்கு ஓர் இணைப்பு வாகனவசதியை ஏற்படுத்த உள்ளோம்.இதற்காக, தனியார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

அதாவது, இணைப்பு வாகனத்தில் கூட்டம் நிரம்பினாலும், நிரம்பாவிட்டாலும் 10 நிமிடத்தில் புறப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படும். இதனால், சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு ஏற்படும் இழப்பை மெட்ரோ ரயில் நிறுவனம் அளிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். இதன்மூலம் பயணிகள் தாமதம் இன்றி விரைவாக பயணம் செய்ய முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE