வீட்டில் இருந்து வெளியேறி ரயிலில் சென்ற 2 சிறுமிகள் மீட்பு

By செய்திப்பிரிவு

சென்னை: அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சையது (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது குடும்பத்தினருடன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். இவரது 13 வயது மகள் கடந்த 20-ம் தேதி வீட்டில் தாயிடம் கோபித்துக் கொண்டு, திருவனந்தபுரம் ரயில் நிலையம் வந்தார். அங்கிருந்து ரயில் மூலமாக நாகர்கோவில் நிலையத்தை அடைந்தார்.

சிறுமி காணாமல் போனது தொடர்பாக கன்னியாகுமரி காவல்துறைக்கு திருவனந்தபுரம் போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, இதுதொடர்பாக சென்னை, விழுப்புரம், திருச்சி, மதுரை உட்பட பல்வேறு நிலையங்களில் உள்ள தமிழக ரயில்வே போலீஸாருக்கு புகைப்படத்துடன் விவரம் அனுப்பப்பட்டது.

இதற்கிடையே, கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வழியாக சென்னை எழும்பூருக்கு புறப்பட்ட கன்னியாகுமரி விரைவு ரயிலில்அந்தச் சிறுமி ஏறி, சென்னை எழும்பூருக்கு நேற்று முன்தினம் காலை வந்தடைந்தார். அங்கிருந்து, மற்றொரு ரயிலில் ஏறிச் சென்றார்.

இதற்கிடையில், அந்தச் சிறுமி கன்னியாகுமரி விரைவு ரயில் மூலமாக சென்னை எழும்பூருக்கு வந்திருப்பாரா? என்ற சந்தேகத்தின்பேரில், சிசிடிவி கேமரா காட்சிகளை எழும்பூர் ரயில்வே போலீஸார் ஆய்வு செய்தனர்.

அப்போது, எழும்பூர் ரயில் நிலைய நடைமேடையில் இறங்கி அந்த சிறுமி நடைமேடை எண் 5 மற்றும் 6-ல் சுற்றித் திரிந்ததும், தொடர்ந்து தாம்பரம் - சந்திரகாச்சி விரைவு ரயிலில் நேற்று முன்தினம் காலை 8.10 மணிக்கு ஏறி,பயணம் செய்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக, இந்த ரயில் செல்லும் பாதையில் உள்ள நிலைய அதிகாரிகளுக்கும், ஆர்பிஎஃப் போலீஸாருக்கும் தகவல்தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் அந்தச் சிறுமி நேற்று முன்தினம் இரவு மீட்கப்பட்டார்.

இதேபோல, சென்னை விநாயகபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி,தனது தோழியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய காதலனைத் தேடி கடந்த 11-ம் தேதி வீட்டிலிருந்து காணாமல் போனார். அதைத்தொடர்ந்து புழல் போலீஸில் சிறுமியின் தந்தை புகார் கொடுத்தார்.

இதுகுறித்து ரயில்வே போலீஸாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் சிறுமியும் அவரது தோழியும் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ரயில்வே போஸீஸார் விரைந்து சென்று இருவரையும் நேற்று முன்தினம் மீட்டனர். தொடர்ந்து, புழல் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, சிறுமி மற்றும் அவரது தோழி இருவரும் ஒப்படைக்கப்பட்டனர்.

2 சிறுமிகள் உட்பட 3 பேரை மீட்டரயில்வே போலீஸாரை ரயில்வேகாவல் கூடுதல் டிஜிபி வனிதா,ரயில்வே காவல்கண்காணிப்பாளர் ஈஸ்வரன் ஆகியோர் பாராட்டினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE