சென்னை மெட்ரோ ரயில் பணிகளால் ஒலி மாசு: மனுதாரர் காவல் துறையை அணுக பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

By ச.கார்த்திகேயன்

சென்னை: மெட்ரோ ரயில் பணிகளால் ஒலி மாசு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், மனுதாரர் காவல்துறையை அணுக வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் லலித்குமார் ஷா. இவர், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: “சென்னை கீழ்ப்பாக்கம் பால்போர் சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகளால் அதிக சத்தம் ஏற்படுகிறது. இப்பணி குடியிருப்பு பகுதியை ஒட்டி நடைபெறுவதால் இரவு நேரங்களில் தூங்க முடியவில்லை.

இந்த சாலையில் ஏராளமான கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள் உள்ளன. அதிக சத்தம் காரணமாக அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். குடியிருப்பு, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் இருக்கும் பகுதிகளில் இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளும் போது சத்தம் வெளியே வராத வகையில், பணிகள் நடைபெறும் இடத்தை சுற்றி தடுப்பு அமைக்கப்பட வேண்டும். ஆனால் எந்த தடுப்பும் அமைக்கப்படவில்லை. எனவே, அதிக சத்தத்துடன் மேற்கொள்ளப்படும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை நிறுத்த உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த மனு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் இன்று (ஆக.22) விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வின் உறுப்பினர்கள் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது: “மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள் இயங்கும் பகுதியில் இருந்து 100 மீட்டருக்குள் இருக்கும் பகுதிகள் சத்தம் எழுப்பக்கூடாத பகுதிகளாக அறிவிக்கப்படுகிறது.

மனுதாரர் வசிக்கும் இடம் சத்தம் எழுப்பக்கூடாத பகுதி தான் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் அளிக்கவில்லை. மனுதாரர் வசிக்கும் பகுதி சத்தம் எழுப்பக்கூடாத பகுதி தான் என்றால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய போலீஸ் அதிகாரிகளிடம் மனு அளிக்கலாம். அவ்வாறு மனுதாரர் மனு அளிக்கும் பட்சத்தில் அதை சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி பரிசீலிக்க வேண்டும்” என அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE