கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடந்த போலி என்சிசி முகாமில் 12 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு பல்நோக்கு குழு தனது விசாரணையை தொடங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடந்த போலி என்சிசி முகாமில், 12 வயதுடைய பள்ளி மாணவியை, நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியும், போலி பயிற்சியாளருமான சிவராமன் (30) பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்டார். இதேபோல், அவர் மேலும் 13 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளதாக எழுந்த புகாரில், சிவராமன் மற்றும் இச்சம்பவத்தை மறைத்த பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், என்சிசி போலி பயிற்சியாளர்கள் உட்பட 11 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஆட்சியர், எஸ்பியுடன் ஆலோசனை: இந்நிலையில், பள்ளி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து விசாரணை நடத்திட, தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், சிறப்பு புலனாய்வு குழு மற்றும் பல்நோக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி காவல் துறை தலைவர் பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவும், சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் பல்நோக்கு குழுவை சேர்ந்த மாநில சமூக பாதுகாப்பு ஆணையர் ஜானி டாம் வர்கீஸ், பள்ளிக் கல்வி இயக்குநர் லதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்த், மனநல மருத்துவர்கள் பூர்ண சந்திரிகா, சத்யராஜ், காவல் துறை ஆய்வாளர் லதா, குழந்தைகள் பாதுகாப்பு ஆர்வலர் வித்யா ரெட்டி ஆகியோர் இன்று (ஆக.22) கிருஷ்ணகிரிக்கு வந்தனர். இக்குழுவினர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கே.எம்.சரயு, எஸ்.பி தங்கதுரை ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல்: இதனை தொடர்ந்து காவல் துறை தலைவர் பவானீஸ்வரி, சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது: “கிருஷ்ணகிரியில் நடந்த துயர சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர், இந்த தகவல்களை மறைத்தவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோர் துரிதமாக நடவடிக்கை எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட்டு, கடுமையான தண்டனை பெற்று தரப்படும். தற்போது முதல்வரின் உத்தரவின் பேரில், சிறப்பு புலனாய்வுக் குழு, பல்நோக்கு குழுவினர் விசாரணையை ஆரம்பித்துள்ளோம்.
» குமரி: மழைநீரில் அடித்துச் செல்லப்பட்ட மோதிரமலை - குற்றியாறு மாற்றுப்பாதை சீரமைப்புப் பணி தீவிரம்
» ‘வாழை’ முதல் 'ராயன்' வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
உளவியல் ஆலோசனை: தற்போது வந்துள்ள புகார் மற்றுமின்றி, வேறு எங்காவது இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதா என்பதை கண்டறிந்து, அதில் தொடர்புடையவர்கள் அனைவரையும், கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்தி கடுமையான தண்டனை பெற்று தரப்படும். புகாருக்குள்ளான தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள், அவர்களது பெற்றோர், ஆசிரியர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இனி எந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெறாத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு குறித்து அரசுக்கு இக்குழு அறிக்கையாக பரிந்துரை செய்யும்.
தயக்கமின்றி புகார் அளிக்கலாம்... - பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைது செய்யப்படடுள்ள சிவராமன், கைது செய்யப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு விஷம் அருந்தியுள்ளார். அவருக்கு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மருத்துவர்களின் பரிந்துரைப்படி மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிவராமன் மீது பாலியல் வன்கொடுமை தொடர்பாக மேலும் ஒரு புகார் வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பொது மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பெற்றோர்கள் தைரியமாக முன்வந்து புகார் அளிக்கலாம். அனைத்து தகவல்களும் ரகசியமாக பாதுகாக்கப்படும். புகார் அளிக்க தயங்குவதால் தான், இதுபோன்ற தவறுகளில் ஈடுபடுபவர்கள் அச்சமின்றி மேலும், மேலும் தவறு செய்கிறார்கள்.
1098 எண்ணில் புகார் அளிக்கலாம்.. பள்ளி, குடும்பத்துக்கு கெட்ட பெயர் வரும் என யாரும் அஞ்ச வேண்டாம். 1098 எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பள்ளிகளில் நடக்கும் எந்த பயிற்சி வகுப்புகளாக இருந்தாலும், கட்டாயம் ஆசிரியை ஒருவர் உடனிருக்க வேண்டும் என பரிந்துரை செய்வோம்.
மேலும், குழந்தைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் குழந்தைகளின் பெயர், குடும்பம், ஊர், பள்ளி உள்ளிட்ட எந்த ஒரு தகவல்களையும் வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். குழந்தைகள் மீதான அத்துமீறல் குறித்தும், இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால் பல்நோக்கு குழு, சிறப்பு புலனாய்வு குழுவை மாலை 7 மணிக்கு மேல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள விருந்தினர் மாளிகையில் நேரடியாக சந்திக்கலாம். அந்த புகார்கள் குறித்த ரகசியம் காக்கப்படும்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.
குவியும் புகார்கள்: கிருஷ்ணகிரி அருகே உள்ள தனியார் பள்ளியில் கடந்த ஜனவரி மாதம், சிவராமன் நடத்திய போலி என்சிசி பயிற்சி முகாமில், பங்கேற்ற 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் வெளிவந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரை தொடர்ந்து, அவர் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago