அரசியல் களம் காணும் தென்மாவட்ட நடிகர்கள் வரிசையில் விஜய்... ‘வெற்றி வாகை’ சூடுவாரா?

By என். சன்னாசி

தமிழக அரசியலையும், சினிமாவையும் ஒன்றை ஒன்று பிரித்துப் பார்க்க இயலாது. அண்ணா, கருணாநிதி, சிவாஜி கணேசன், எம்ஆர்.ராதா, எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்ஜிஆர், பாக்யராஜ், டி.ராஜேந்தர், விஜயகாந்த், கார்த்திக், சரத்குமார், சீமான், கருணாஸ், கமல்ஹாசன், மன்சூர் அலி கான் என நடிகர்கள் பலர் அரசியல் கட்சிகளைத் தொடங்கினர். இந்த வரிசையில் சமீபத்தில் இணைந்த நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை அறிமுகம் செய்துள்ளார்.

குறிப்பாக இவர்களில் தென்மாவட்ட நடிகர்கள் என எடுத்துக் கொண்டால் விஜய்காந்த் (விருநகர் ), கார்த்திக் (நெல்லை) , சீமான் (ராமநாதபுரம் - அரனையூர்) சரத்குமார் (சிவகங்கை - பள்ளத்தூர்) கமல்ஹாசன் (ராமநாதபுரம் - பரமக்குடி), விஜய் (ராமநாதபும் ) மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். சீமான், கமல், விஜய் ஆகியோர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், தமிழகத்தில் நடிகர்கள் தொடங்கிய கட்சிகளில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் இன்றைக்கும் தவிர்க்க முடியாத அமைப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளன. பிற நடிகர்களின் கட்சிகள் வளர முடியவில்லை.

விஜயகாந்த், கமல்ஹாசன், கருணாஸ் போன்றவர்களின் கட்சிகள் தொடர்ந்து தனி கட்சியாக செயல்படுகின்றன. தேர்தல்களிலும் தொடர்ந்து போட்டியிடுகின்றன. ஆனாலும், ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வளர அக்கட்சிகள் போராடுகின்றன. நடிகர்களின் ஓரிரு கட்சிகளும் தேர்தல் களத்தில் நீடிக்க முடியாமல் காலத்தால் கலைந்து பிற கட்சியுடன் ஐக்கியமாகிய சூலும் உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது, நடிகர் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துக் கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்திருந்தாலும், கட்சிக்கான அதிகாரபூர்வ கொடியை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளார். சிவப்பு, மஞ்சள் நிறங்களை உள்ளடக்கிய கொடியின் நடுவில் தும்பிக்கயை தூக்கிய நிலையில் இரு யானைகளின் நடுவில் வாகைப்பூ இடம் பெற்றுள்ளன. இக்கொடிக்கு பின்னால் பெரிய வரலாறு, கொள்கை உள்ளது என விஜய் தெரிவித்துள்ளார்.

கட்சிக் கொடி, பாடல் அறிமுகத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அவரது கட்சியினர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் விஜய்யின் வருகை பிற கட்சிகளுக்கு எவ்வளவு தூரம் சவாலாக இருக்கப் போகிறது என்பது தேர்தல் நேரத்தில் தெரியும்.

தென்மாவட்டங்களில் இருந்து தனிக்கட்சி தலைவர்களாக உருவெடுத்த பிரபல நடிகர்களில் சீமான், கமல்ஹாசன், விஜய் ஆகியோர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்றாலும், செல்வாக்கு யாருக்கு என்பதற்கு தேர்தல் களமே விடையளிக்கும். விஜய் தனித்து நின்று வெற்றி வாகைப்பூ சூடப் போகிறாரா அல்லது பிற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து தேர்தல் களம் கண்டு ஜொலிப்பாரா என்பதற்கு தேர்தல் களமே பதிலளிக்கும்.

இது குறித்து அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் ஒருவர் கூறியது: “பொதுவாக அரசியல் கட்சி தொடங்கும் நடிகர்கள், தங்களது ரசிகர் மன்றங்களை ஏற்படுத்தி, நற்பணிகளை செய்கின்றனர். இவற்றின் நடவடிக்கையைப் பொறுத்தே கட்சி தொடங்குகின்றனர். ரசிகர் மன்ற நிர்வாகிகளையே கட்சி நிர்வாகிகளாக மாற்றுகின்றனர். தென் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்த நடிகர் விஜய்காந்த் விழுப்புரம் மாவட்டம், விருத்தாசலத்தில் முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டு வென்றார். இதற்கு அப்பகுதியில் இருந்த அவரது ரசிகர் மன்றங்களின் செல்வாக்கே காரணம்.

தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் சீமான், கமலஹாசன், கார்த்திக், சரத்குமார் போன்றவர்களும் தனித்தும், கூட்டணியில் இணைந்தும் தேர்தல் களம் கண்டாலும் வெற்றிக்கான சூழலை உருவாக்கவில்லை. விஜய் கட்சியாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துப் பார்க்கலாம்” என்றார்.

விஜய் கட்சி நிர்வாகிகள் கூறுகையில், “எங்களை தலைவர் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவர். போரில் வெற்றி பெற்றால் வீரர்கள் சூடும் வாகைப்பூ எங்களது சின்னத்தில் உள்ளது. தமிழகத்தில் இரு பெரும் கட்சிக்கு இடையே நடக்கும் போராகவே நினைத்து எங்கள் தலைவர் களமிறங்குகிறார். அதில் வெற்றி பெறுவோம். அவரை குறிப்பிட்ட பகுதி என சுருக்கிவிட முடியாது. தமிழகம் முழுவதற்குமான தலைவராக அவரை மக்கள் பார்க்கின்றனர். அவரது சொந்த ஊர் ராமநாதபுரம் என்பது, தற்போதுதான் தெரியும். சாதாரண நடிகராகி, தற்போது தமிழத்துக்கான தலைவராக வளர்ந்து நிற்கிறார். தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம்,” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE