குரங்கு அம்மைக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள்: சுகாதார துறை அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: குரங்கு அம்மைக்கு சிகிச்சை அளிக்க சென்னை, திருச்சி, மதுரை, கோவை அரசு மருத்துவமனைகளில் தலா 10 படுக்கைகளுடன் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில் குரங்கு அம்மை தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

உலகம் முழுவதிலும் 116 நாடுகளில் குரங்கு அம்மை பரவத் தொடங்கியுள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் இதன் பரவல் வேகமாக உள்ளதால், பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார நிறுவனம் கடந்த 14-ம் தேதி அறிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் இது சம்பந்தமாக தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தமிழகத்திலும் விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கை கள் குறித்து பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக, சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளது. இங்கு பயணிகளின் உடல் வெப்பத்தை பரிசோதிக்கும் அமைப்பு நிறுவப்பட்டுள் ளது. மருத்துவர்கள், களப் பணியாளர்கள் முழு நேரமும் பணியில் இருப்பார்கள்.

பயணிகளுக்கு தொற்று கண்டறியப்பட்டால், விமான நிலையத்திலேயே தனிமை அறையில் தங்கவைத்து முதலுதவி அளிக்கப்படும். தேவைப்பட்டால், மேல்சிகிக்சைக் காக மருத்துவமனைக்கு அனுப்பப் படுவார்கள்.

குரங்கு அம்மை சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, கோவை, திருச்சி கிஆபெ விசுவநாதம், மதுரை ராஜாஜி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் தலா 10 படுக்கைகளுடன் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

காய்ச்சல், தலைவலி, உடல்வலி, தடிப்புகள் போன்றவை இதற்கான அறிகுறிகள் ஆகும். யாருக்காவது இந்த அறிகுறிகள் இருப்பது தெரியவந்தால், அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை. பாதிப்பு கண்டறியப்பட்டால், மருத்துவர்கள், செவிலியர்கள் கவச உடை அணிந்து சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் காங்கோவில் 1,754 பேர், அமெரிக்காவில் 1,399, சீனாவில் 333, ஸ்பெயினில் 332, தாய்லாந்தில் 120, பாகிஸ்தானில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இ.கருணாநிதி எம்எல்ஏ, பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவ கல்வி, ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE