ஆக.24, 25-ம் தேதிகளில் பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு

By செய்திப்பிரிவு

சென்னை: பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆக.24, 25-ம் தேதிகளில் நடைபெறுகிறது. ஆன்மிக உரை, கண்காட்சி, கலை நிகழ்ச்சியுடன் இம்மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு திண்டுக்கல் மாவட்டம், பழநியில் வரும் ஆக.24, 25-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. முதல் நாளில் மாநாட்டு கொடியை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் ஏற்றி வைக்கிறார். சிறப்புக் கண்காட்சியை அமைச்சர் பெரியசாமி, வேல் கோட்டத்தை திண்டுக்கல் எம்.பி. ஆர்.சச்சிதானந்தம் மற்றும்பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடக்கவுரை ஆற்றுகிறார்.

இந்நிகழ்வுகளில் தருமபுரம், குன்றக்குடி, மதுரை, மயிலம் பொம்மபுரம், திருவாவடுதுறை ஆதீனங்கள் ஆசியுரை வழங்குகின்றனர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், பி.புகழேந்தி, வி.சிவஞானம், மலேசிய அமைச்சர் ஒய்.கி.டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். ஆன்மிக பேச்சாளர் சுகிசிவம் தலைமையில் சிந்தனை மேடை நிகழ்வும் நடைபெறுகிறது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைக்கிறார். கோவை கவுமார மடத்தின் குமரகுருபர சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நிறைவு விழாவில்,தமிழ்க் கடவுள் முருகனின்பெருமைகளை பறைசாற்றியவர்களுக்கு 15 முருகனடியார்களின் பெயரிலான விருதுகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் வழங்குகிறார். பின்னர் மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE